கையூட்டு கேட்ட ‘உதவியாளரு’க்கு எதிராக சைட் சித்திக் போலீசில் புகார்

இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சித்திக் சைட் அப்துல் ரஹ்மான், அவரின் உதவியாளர் என்று கூறிக்கொண்டு ஜோகூர், மூவாரில் உள்ள பள்ளி நிர்வாக வாரியங்களிடம் பள்ளிக்கு நிதி பெற்றுத் தருவதற்குக் கையூட்டு கேட்ட ஆசாமிக்கு எதிராக போலீசில் புகார் செய்யவுள்ளார்.

“என்னுடைய மூவார் அலுவலகத்திடம் அந்த வேடதாரி குறித்து போலீசில் புகார் செய்யுமாறு கூறியுள்ளேன்”, என்று சைட் சித்திக் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

முன்னதாக, சீன நாளேடு ஒன்று, தன்னை மூவார் எம்பியின் உதவியாளர் என்று கூறிக்கொண்டு ஒருவர் மூவார் பள்ளிகளின் வாரிய இயக்குனர்களை அணுகித் தனக்குக் கையூட்டு கொடுத்தால் தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து பள்ளிகளுக்குப் பணம் கிடைப்பதற்கு உதவுவதாகக் கூறிவருவதாக செய்தி வெளியிட்டிருந்தது.

மூவார், ஜோகூர் மாநிலத்தின் வடக்கத்தி மாநிலமாகும். அதில் பக்ரி, பாகோ, லெடாங், மூவார் என நான்கு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.

அந்த நாளேட்டில் வெளிவந்த செய்திக்கு சைட் சித்திக் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் உடனடியாக மறுப்புத் தெரிவித்தார்.

“குறிப்பிட்ட அந்த நபர் சைட் சித்திக் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் எந்தக் காலத்திலும் அதில் பணியாற்றியதில்லை”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

பின்னர் அந்த நாளேடு திருத்தம் செய்யப்பட்ட செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், “தீவிர விசாரணைக்குப் பிறகு எம்பியின் உதவியாளர் கூறிக்கொண்டிருந்த அம்மனிதர் ஊராட்சி மன்றத்தால் நியமிக்கப்பட்ட குத்தகையாளர் என்பது தெரிய வந்தது”, எனக் குறிப்பிட்டிருந்தது.