கேமரன் மலை இடைத்தேர்தல் : பிஎன் நாற்காலியைத் தற்காத்துகொள்ளும், நஜிப் நம்பிக்கை

எதிர்வரும் ஜனவரி 26-ல் நடைபெறவிருக்கும் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தலில், பிஎன் தனது இடத்தைத் தற்காத்துகொள்ளும் என அதன் முன்னாள் தலைவர் நஜிப் ரசாக் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதனால், மக்கள் அதன் மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, அவர்கள் பாரிசானுக்கு வாக்களிக்க வாய்புள்ளதாக அவர் கூறினார்.

“ஆக, பாரிசான் நேசனல் சரியான முறையில் தனது தேர்தல் இயந்திரங்களைப் பயன்படுத்தினால், அந்த நாற்காலியை நாம் தற்காத்துகொள்வதில் சிக்கல் இல்லை,” என பெக்கான் எம்பியுமான அவர் இன்று தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய, ஜனவரி 12-ம் தேதியைத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

பிஎன் அரசாங்கம் பூர்வக்குடி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனும் டிஏபி லிம் கிட் சியாங்கின் கூற்றையும் நஜிப் மறுத்தார்.

இது மக்களை, குறிப்பாக கேமரன் மலை பூர்வக்குடிகளை குழப்புவதற்காக வெளியிடப்பட்ட செய்தி என்று நஜிப் சொன்னார்.

“பூர்வக்குடி மக்களுக்கு, பிஎன் நிறைய உதவிகள் செய்துள்ளது. குறிப்பாக, அவர்களின் கிராம மீள்குடியேற்றம், அங்குள்ள சுங்கை ரூய்ல் கிராம மீள்குடியேற்றத்தை நானே தொடக்கி வைத்திருக்கிறேன். தற்போது அவர்களின் குடியிருப்புகள் எவ்வளவு வசதியாகா இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்,” என்றார் அவர்.

“அம்மக்களுக்கு உதவ, நம்மிடம் நிறைய திட்டங்கள் இருக்கின்றன. சில குடியிருப்புகள், உள்ளே நீண்ட தூரத்தில் இருப்பதால், திட்டமிடப்படும் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைபடுத்த நீண்ட காலம் பிடிக்கும்.

“ஆக, பிஎன் பூர்வக்குடி மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை என்பதில் உண்மையில்லை,” என நஜிப் தெரிவித்தார்.