‘அடிப் மரணத்தில் இனவாத ஊகத்தை லொக்மான் நிறுத்த வேண்டும்’, சேவியர்

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடம், தீயணைப்பு வீரர் முஹம்மட் ஆடிப் முகமது காசிம் மரணத்தில், ‘இனவாத ஊகங்க’ளை நிறுத்த வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

ஆடிப் மரணம் மீதான விசாரணை தொடங்கப்பட்டு, மரணத்திற்கான சான்றுகள் – ஏதேனும் இருந்தால் – அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை லொக்மான் காத்திருக்க வேண்டுமென அவர் சொன்னார்.

“இனவெறியை ஊடுருவச் செய்ய வேண்டாம் என நான் அவரைக் கேட்டுக்கொள்கிறேன், விசாரணை தொடங்கப்பட வேண்டும் எனும் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்.

“சம்பவத்தை மூடிமறைக்கும் முயற்சிகள் நடப்பதாக, நம்பகமான சான்றுகள் அவரிடம் இருந்தால், விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், பொறுப்பானவர்களிடம் அதனை அனுப்ப வேண்டும்,” என அவர் இன்று, தனது உதவியாளர் வழி மலேசியாகினிக்கு தெரிவித்தார்.

நேற்று நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது, இறந்த ஆடிப்பின் மரணத்தை முடிவுக்குக் கொண்டுவர, பல அமைச்சர்கள் முயற்சிப்பதாக லொக்மான் தெரிவித்தார்.

பிரதமர் மகாதிர் முகமட், உள்துறை அமைச்சர் முஹிட்டின் யாசின் மற்றும் அட்டர்னி ஜெனரல் டோமி தோமஸ் ஆகியோர், ஆடிப் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் “பாதுகாக்க” முயற்சிக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

“சில அமைச்சர்கள், (பிரதமர் இலாகாவைச் சேர்ந்த) பி வேதமூர்த்தி போன்றோர் ஆடிப்பின் பிரேத பரிசோதனை அறிக்கையைத் திருத்தும்படி அமைச்சரவைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

“தீயணைப்பு வண்டி மோதியதாலேயே ஆடிப் இறந்தார், அது ஒரு விபத்து என அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

“இது நடக்க நாம் அனுமதிக்கப் போகிறோமா?” என்று நேற்று லொக்மான் கேள்வி எழுப்பினார்.

இதுபற்றி பதிலுரைக்க மலேசியாகினி கேட்டுக்கொண்ட போதும், வேதமூர்த்தியின் அலுவலகத்தில் இருந்து, இதுவரை எந்தவொரு பதிலும் வரவில்லை.