யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மத் V, இன்று பதவி விலகியதைத் தொடர்ந்து, மலேசிய கூட்டமைப்பின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நாளை, மலாய் அரசர்கள் இதுகுறித்து கலந்துபேச ஒன்று கூடவுள்ளதாக மலேசியாகினிக்குத் தகவல் வந்துள்ளது. ஆனால், நாட்டின் அடுத்தப் பேரரசர் யார் எனும் முடிவு உடனடியாக எடுக்கப்படுமா இல்லையா என்பது தெரியவில்லை.
தற்போதைக்கு, துணைப் பேரரசரான, பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா அப்பதவியில் தற்காலிகமாக இருப்பார்.
மரபுப்படி, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில், நாட்டின் பேரரசர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அதன்படி, அடுத்த பேரரசராக முடிசூட்டப்பட வேண்டியது பஹாங் சுல்தான். ஆனால், பஹாங் சுல்தான், சுல்தான் அஹ்மட் ஷா உடல்நலக்குறைவாக இருப்பதால், தற்போது அவரது மகன், தெங்கு அப்துல்லா அப்பதவியில் வீற்றிருக்கிறார்.
அதிகாரப்பூர்வமாக, துங்கு அப்துல்லா இன்னும் சுல்தானாக முடிசூட்டப்படவில்லை. ஒருவேளை, ஆட்சியாளர்கள் சபை, பஹாங்கிலிருந்து பேரரசரைத் தேர்ந்தெடுக்கவில்லையானால், அடுத்த நிலையில் இருப்பது, ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் ஆவார்.
ஜொகூருக்கு அடுத்த நிலையில் இருப்பது பேராக். ஆட்சியாளர்களின் தேர்வு செயல்முறை சீராக நடந்தால், எதிர்வரும் ஏப்ரலில், புதியப் பேரரசர் முடிசூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.