‘பணி நிமித்தமே அமைச்சர்கள் கேமரன் மலைக்குச் சென்றனர், பிரச்சாரத்திற்காக அல்ல’

கேமரன் மலை இடைத்தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அங்குச் சென்ற துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், தனது வருகையை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

தேசியப் பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்.) தலைவர் என்ற முறையிலேயே தான் அங்குச் சென்றதாகவும், அரசியல் பிரச்சாரங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வான் அஸிஸா கூறினார்.

“டிசம்பர் 31-ம் தேதி நிறைவுபெற்ற ஓப்ஸ் காடிங் 4 தொடர்பான எம்.கே.என். கூட்டம் டிசம்பர் 27-ம் தேதி முடிந்ததைத் தொடர்ந்தே நான் அங்குச் சென்றேன்.

கேமரன் மலை இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்னும் தொடங்கப்படாத நிலையில், அங்கு சில அமைச்சர்கள் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பில், தேர்தல் என்.ஜி.ஓ.-ஆன பெர்சேயின் விமர்சனம் குறித்து அவர் பதிலளித்தார்.

நீர், நில மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர், டாக்டர் சேவியர் ஜெயக்குமார், அவர் அமைச்சின் பணி காரணமாகவே அங்குச் சென்றார்.

“அவர் அங்கு நீர் பிரச்சனைப் பற்றியே கலந்துரையாடினார், அது பிரச்சாரம் அல்ல. இன்னும் வேட்புமனு தாக்கல்கூட செய்யப்படவில்லை,” என்றார் அவர்.

மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இத்தகையப் பணிகள் தொடர வேண்டும் என்று அவர் கூறினார்.