போட்டியிடுவதில்லை என்ற முடிவில் மஇகா உதவித் தலைவர் அதிருப்தி

ஜனவரி 26 கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ம இகா தலைமைத்துவம் எடுத்த முடிவால் கட்சி உதவித் தலைவர் டி.மோகன் அதிருப்தி அடைந்துள்ளார்.

என்றாலும், வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு என்ற தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் கருத்தை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து விலக மத்திய செயல்குழு செய்த முடிவை ஏற்பதாக அந்த செனட்டர் கூறினார்.

“மஇகா கலாச்சாரம் நாம் அறிந்ததுதான். தலைவரின் முடிவை எதிர்க்க மாட்டார்கள்.

“இரகசிய வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் பல செயலவை உறுப்பினர்கள் போட்டியிலிருந்து விலகும் முடிவை எதிர்த்திருப்பார்கள்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

56 செயலவை உறுப்பினரில் அறுவர் மட்டுமே அம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக நேற்று மலேசியாகினி அறிவித்திருந்தது.

தேர்தலில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான் என்று கூறிய மோகன், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மக்களின் மனத்தைக் கவர பாடுபட வேண்டும், அதுதான் முக்கியம் என்றார்.

“கேமரன் மலை பாதுப்பான தொகுதி அல்ல என்றால் தாப்பாகூட பாதுகாப்பான தொகுதி அல்லதான்”, என்றவர் சொன்னார்.

தாப்பாவின் எம்பி மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன். அவர்தான் இப்போதைக்கு மஇகாவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர்.

இதனிடையே மோகன், கேமரன் மலையில் அம்னோ வேட்பாளர் போட்டியிட்டால் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் என்று கூறிய அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நோ ஒமாரின் வாதம் சுத்த அபத்தம் என்றும் சாடினார்.

“அவருடைய வியூகத் திறனைத்தான் கடந்த பொதுத் தேர்தலில் பார்த்தோமே, சிலாங்கூரில் பிஎன் படுதோல்வி அடைந்ததே. பேராசை வேண்டாம்”, என்றார்.

அங்கு மலாய்க்கார வாக்காளர்கள் அதிகம் என்பதால் அவர்களைக் கொண்டு அம்னோ வெற்றிபெறும் என்ற நோவாவின் வாதத்தில் பொருளில்லை.

“2004-இலிருந்து மஇகா கேமரன் மலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்துள்ளது. அப்படி இருக்க இப்போது மட்டும் மலாய் வாக்குகளை இழந்து விடுமா? நோவாவின் பேச்சு மலாய்க்காரர்கள் இனவாதிகள், அவர்கள் மலாய் வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது”, என்றும் மோகன் சொன்னார்.

கடந்த பொதுத் தேர்தலில் மஇகா உதவித் தலைவர் சி.சிவராஜ் டிஏபியின் எம். மனோகரனையும் வேலும் மூவரையும் எதிர்த்துப் போட்டியிட்டு 600 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

ஆனால், தேர்தல் நீதிமன்றம் அது ஊழலால் கிடைத்த வெற்றி என்பதால் செல்லாது என்று தீர்ப்பளித்து மறுதேர்தலை நடத்த உத்தரவிட்டது.