கேமரன் மலை இடைத் தேர்தலில் பாரிசான் நேசனல் (பிஎன்), ரம்லி முகம்மட் நூரைத் தனது வேட்பாளராகக் களமிறக்குவதால் பக்கத்தான் ஹரப்பானின் வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதாக டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.
போலீஸ் அதிகாரியாக சிறந்த பணியாற்றி ஓய்வு பெற்றவரான ரம்லி, கேமரன் மலையின் தவப் புதல்வர்களில் ஒருவர் என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அந்த வகையில் 14வது பொதுத் தேர்தலில் தேசிய அளவில் வெற்றி பெற்றாலும் கேமரன் மலையில் தோல்வியுற்ற ஹரப்பான், இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற ஏதாவது “அதிசயம்” நிகழ்த்தினால் மட்டுமே முடியும் என்றவர் குறிப்பிட்டார்.
இதில் “வருந்தத்தக்க விசயம் என்னவென்றால்” பிஎன் ஆட்சியில் இருந்தபோது அது, ரம்பி போன்ற ஒரு ஓராங் அஸ்லியை வேட்பாளராகக் களமிறக்கியதில்லை என்று லிம் தெரிவித்தார்.
“அப்படிச் செய்திருந்தால் அவர் துணை அமைச்சராகி அல்லது முழு அமைச்சராகக்கூட ஆகி ஒராங் அஸ்லி மக்களின் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலைக்கு முடிவு கட்டி அவர்களை தேசிய நீரோட்டத்தில் கொண்டு வந்து இணைத்திருக்கக் கூடும்”, என்றவர் சொன்னார்.
ரம்லி, 61, போலீஸ் உதவி ஆணையர் பதவி வகித்தவர். ஓராங் அஸ்லி மக்களில் அவ்வளவு உயரிய பதவி வகித்தவர் வேறு யாருமில்லை.
அவர் பிஎன் உறுப்புக் கட்சிகளில் எதிலும் உறுப்பினராக இருந்ததில்லை என்றும் தெரிகிறது.