கேவியஸ் : ரம்லியை எனக்குப் பிடிக்கும், அவர் நல்லவர்

கேமரன் இடைத்தேர்தல் | எதிர்வரும் ஜனவரி 26-ல், கேமரன் மலை இடைத்தேர்தலில், பாரிசான் நேசனல் வேட்பாளராக ரம்லி முகமட் நோர்-ஐ நிறுத்திய பிஎன் முடிவை எம் கேவியஸ் பாராட்டினார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கேமரன் நாடாளுமன்றத் தொகுதியில் அவருடன் இணைந்து பணியாற்றிய போது, அந்த முன்னாள் போலீஸ் கமிஷனரைத் தனிப்பட்ட முறையில் அவர் அறிந்திருப்பதாக மைபிபிபி-இன் சர்ச்சைக்குரிய தலைவர், கேவியஸ் தெரிவித்தார்.

மலேசிய வரலாற்றில், பூர்வக்குடியினர் மத்தியில், காவல்துறையில் உயர்பதவிக்கு வந்த முதல் நபர் ரம்லி, பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் அவர் என்று கேவியஸ் தெரிவித்தார்.

கேமரன் இடைத்தேர்தலில் போட்டியிடும் கேவியஸ், ரம்லியால் பூர்வக்குடியினர் மற்றும் மலாய்க்காரர்கள் வாக்குகளைத் திரட்ட முடியும் என்றும் சொன்னார்.

“இது பிஎன்-னின் துல்லியமான மற்றும் மாறுபட்ட தேர்வு. ஆனால், மஇகா-வில் இருந்து ஓர் இந்தியரை அவர்கள் களமிறக்காததால், இந்தியர்களின் வாக்குகள் பிஎன் –னுக்குக் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது, ஆனால், இந்தியர்களின் வாக்கு அங்கு 16 விழுக்காடு மட்டுமே.

“ஆக, இது சிறந்ததொரு தேர்வு, ரம்லி மிகவும் நல்லவர், எனக்கு அவரைப் பிடிக்கும்,” என மலேசியாகினியிடம் கேவியஸ் தெரிவித்தார்.

கேமரனில் அவரின் வெற்றி வாய்ப்பு பற்றி கேட்டபோது, இந்தப் போட்டி பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனலுக்கு இடையே என்று அவர் பதிலளித்தார்.

கேமரன் மலையில், பல ஆண்டுகள் சேவையாற்றிய போதும், தனக்கு பிஎன் வாய்ப்பளிக்காததால், அங்குப் போட்டியிட தான் முடிவெடுத்ததாகவும் அவர் சொன்னார்.

கேமரன் மலை மக்களுக்காக கடுமையாக உழைத்ததாகவும், அங்குள்ள மக்களும், 14-வது பொதுத் தேர்தலில், தன்னையே வேட்பாளராக பிஎன் நிறுத்த வேண்டும் என விரும்பியதாகவும் கூறிய கேவியஸ், மஇகா-வைச் சேர்ந்த சி சிவராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததாக கூறினார்.

தற்போது, மைபிபிபி பிஎன்-னில் இருந்து விலகிவிட்டதால், அங்கு அவர் போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாது என அவர் மேலும் சொன்னார்.

மைபிபிபி மட்டுமின்றி, பாரிசான் கூட்டணியில் இருந்து விலகிய கெராக்கானும், அதன் கேமரன் தொகுதி துணைத் தலைவர், டாக்டர் ஏடி எட்வர்ட் தர்மராஜ்-ஐ வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.