இன்று தொடங்கி தேர்தல் பரப்புரைகளால் பரபரப்படையப் போகிறது கேமரன் மலை . தொடர்ந்து பிஎன் வசம் இருந்து வந்துள்ள அத்தொகுதியை இந்தத் தேர்தலிலாவது கைப்பற்றி ஒரு வரலாறு படைக்கும் முனைப்பில் உள்ளது பக்கத்தான் ஹரப்பான்.
வழக்கமாக அத்தொகுதியில் மஇகா வேட்பாளரையே களமிறக்கும் பிஎன் இம்முறை அவ்வழக்கத்தை மாற்றி பிஎன் உறுப்புக் கட்சிகள் எதிலும் உறுப்பினர் அல்லாத ரம்லி முகம்மட் நோரைக் களமிறக்க முடிவு செய்துள்ளது.
உள்ளூரைச் சேர்ந்தவரான ரம்லி, ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. இடைத் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு அவருக்கே அதிகம் என்று கூறப்படுகிறது. அவர் அங்குள்ள மலாய்க்காரர்களையும் ஓராங் அஸ்லிகளையும் ஒருங்கே கவர்வார் என்று கருதப்படுகிறது. அத் தொகுதியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அவ்விரு இனங்களையும் சேர்ந்தவர்கள்.
ஹரப்பான் எம். மனோகரனைக் களமிறக்குக்கிறது. மனோகரன் கேமரன் மலையில் போட்டி இடுவது இது மூன்றாவது முறை.
2013 மற்றும் 2018 தேர்தல்களில் சொற்ப வாக்குகள் வேறுபாட்டில்தான் பிஎன் வெற்றி பெற்றது.
இந்த இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் இருவர் களமிறங்குகிறார்கள்.
அவர்களில் ஒருவரான வொங் செங் ஈ, ஒரு குடியானர்போல் ஆடை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். கேமரன் மலையில் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கப் போவதாக அவர் சொன்னார்.
“இது ஒரு சிறு தேர்தல். நான் சுற்றுச்சூழல், குடியானவர் சமூகம், சுற்றுலா, ஓராங் அஸ்லி நலன்கள் ஆகியவற்றுக்காக போராடுவேன்ன்”, என்றார்.
இன்னொரு சுயேச்சை வேட்பாளரான சலேஹுடின் அப் தாலிப், பெல்டா, சுங்கை கோயான் 1-ஐச் சேர்ந்தவர். பெல்டா விவகாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரப் போவதாக அவர் கூறினார்.
இன்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் வேட்பாளர்கள் இன்று தொடங்கி 14 நாள்களுக்கு பரப்புரை நடவடிக்களில் ஈடுபடலாம். ஜனவரி 26-இல் வாக்களிப்பு.