ஒரு கட்டிடத்தின் விளக்குகள் சிலுவை வடிவில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அம்னோ கப்பளா பத்தாஸ் எம்பி ரீசால் மரைக்கான் முஸ்லிம்-அல்லாதாரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்திய புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் ஹிஸ்யாவ் லியோங், “பிரச்னை இல்லாத ஒன்றையும் இன, சமய விவகாரமாக்கும்” அம்னோ தலைவர்களின் செயல்களைக் கண்டு அலுத்துப் போய்விட்டது என்றார்.
“எந்தவொரு ஆதாரமுமின்றி இஸ்லாத்துக்குக் களங்கம் அல்லது மிரட்டல் என்று கூறிக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளுக்குத் துணை போவதை நாம் நிறுத்த வேண்டும்”, என்றவர் சொன்னார்.
நேற்று, ஜெலுத்தோங் அடுக்ககம் ஒன்றில் விளக்குகள் ஏற்றப்பட்டதும் சிலுவை வடிவம் காட்சியளிப்பதாகவும் எனவே, அதனக் கட்டிய மேம்பாட்டாளருக்கு எதிராக பினாங்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரீசால் கூறி இருந்தார்.
“பல இனங்களையும் சமயங்களையும் கொண்ட சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்” என்பதை ரீசாலுக்கு நினைவூட்டிய கூய் எல்லாத் தரப்பினரும் சமமாக நடத்தப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்றார்.
“என்னைப் பொறுத்தவரை, ரீசால் ஒன்றுமில்லாததை அரசியல் ஆதாயத்துக்காக இன, சமய விவகாரமாக்கி சமுதாயத்தில் பதற்றத்தை உருவாக்க முயல்கிறார்”, என்றாரவர்.