ஜோகூர் மந்திரி புசார் ஒஸ்மான் சாபியான் , தாம் புதன்கிழமை சிங்கப்பூர் நீர் எல்லையைத் தாண்டிச் செல்லவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
தாம் அப்பகுதிக்குச் சென்றது மலேசியப் பாதுகாப்புப் படைகள் முறையாக பணியாற்றுகிறார்களா என்பதைப் பார்ப்பதற்கே என்றாரவர்.
எம்.வி. பீடோமான் கப்பலுக்குச் சென்றதில் சினமூட்டும் நோக்கம் சிறிதும் இல்லை. வெளியுறவு அமைச்சுக்கும் அது தெரியும் என்றவர் சொன்னார்.
“வெளியுறவு அமைச்சரும் துணை அமைச்சரும் தொடர்புகொண்டு ஏன் சென்றீர்கள் என்று கேட்டனர். நான் போகாவிட்டால் மக்கள் மந்திரி புசார் வேலை செய்வதில்லை என்று கூறுவார்கள் என்றேன்.
“அதனால்தான் சிங்கப்பூர் ஜனவரி 13, 14-இல் நடைபெறவிருந்த இஸ்கண்டர் மலேசியா மீதான கூட்டு அமைச்சர்நிலைக் குழு(ஜேஎம்சிஐஎம்)க் கூட்டத்தை இரத்துச் செய்தது என்றால் அது அவர்கள் எடுத்த முடிவு”, என்றவர் ஜோகூர் பாருவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, சிங்கப்பூர் வெளியுறவுத் துறை திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஜேஎம்சிஐஎம் கூட்டத்தைத் தள்ளிவைக்கப் பரிந்துரைத்ததாகவும் அதற்கு மலேசியா ஒப்புக்கொண்டதாகவும் ஓர் அறிக்கையில் கூறிற்று.