‘தொண்டூழியர் ’ என்பதற்குப் ‘புது விளக்கம்’ தருகிறது ஹரப்பான்: வீ சாடல்

மசீச தலைவர் வீ கா சியோங் ‘தொண்டூழியர் ’ என்ற சொல்லுக்கு பக்கத்தான் ஹரப்பான் ‘புது விளக்கம்’ அளிப்பதாகச் சாடினார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் சிவப்பு வண்ண பக்கத்தான் ஹரப்பான் டி-சட்டை அணிந்த பெண் ஒருவர் பணம் பட்டுவாடா செய்வதைக் காண்பிக்கும் படமொன்றின் தொடர்பில் கருத்துரைத்த வீ, புதிய மலேசியாவில் ‘தொண்டூழியர் ’ என்ற சொல் புதுப் பொருள் விளக்கம் பெற்றிருப்பதாகக் கிண்டலடித்தார் என த ஸ்டார் கூறியது.

“தொண்டூழியர் என்றால் என்ன?

“அகராதிகளின்படி , எவ்வித எதிர்பார்ப்புமின்றி தானாக பணிசெய்ய முன்வரும் ஒருவர்.

“ஆனால், இப்போது தொண்டர் என்பவர் சேவை செய்பவர்தான் ஆனால், அதற்காக அவருக்கு வெகுமதி அளிக்கப்படும் அல்லது பெட்ரோலுக்குப் பணம் கொடுக்கப்படும்”. நேற்று பிரிஞ்சாங்-கில் கேமரன் மலை இடைத் தேர்தல் பிஎன் வேட்பாளர் ரம்லி முகம்மட் நோருடன் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் வீ செய்தியாளர்களிடம் பேசினார்.

பணம் கொடுக்கும் படங்கள் தொடர்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஹரப்பான், சனிக்கிழமை அது பற்றி விளக்கமளித்தது. வேட்புமனு தாக்கல் தினத்தன்று தங்கள் சொந்தச் செலவில் தானா ராத்தா வந்த கட்சித் தொண்டர்களுக்கு அவர்களின் “செலவை ஈடுசெய்ய” பணம் கொடுக்கப்பட்டதைக் காட்டும் படங்கள்தான் அவை என்று அது கூறிற்று.

அப்படிக் கொடுக்கப்பட்ட பணம் தேர்தல் செலவுக் கணக்கில் காண்பிக்கப்படும் என்று ஜெலாய், ஹரப்பான் நடவடிக்கை தலைவரின் உதவியாளர் அர்விந்த் பாரெட் கூறினார்.

இதனிடையே, வீ, அச்சம்பவம் பற்றி விசாரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லையென்று அதன் தலைவர் அஸ்ஹார் ஹருன் கூறுவது “ஆச்சரியமாக உள்ளது”, என்றார்.

“இசி குழுக்கள் பரப்புரை நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும், ஏதோ ஒன்று நடந்துள்ளது என்று தெரியும்போது அவை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

“ஒரு சுவரொட்டியில் ஒருவரின் முகம் இடம்பெற்றிருப்பது தவறு என்பதால் தலையையே வெட்டி எடுக்கும்போது இச் சம்பவம் தொடர்பில் அது கருத்துரைக்கக் கூடாதா?

“ஏதோ தவறு நிகழ்கிறது”, என்று வீ கூறினார்.

அச்சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த அஸ்ஹார், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தம்மிடம் டிவிட்டரில் வலம் வரும் படங்கள் மட்டுமே உள்ளன, நேரடி சாட்சியம் எதுவும் இல்லை என்றார்.

நடந்ததை இசி தவிர்த்து எம்ஏசிசி-யும் விசாரிக்க வேண்டும் என்று வீ வலியுறுத்தினார்.

“மஇகா இளைஞர்கள் புகார் செய்தனர், நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

“பணம் கொடுத்தவர் யார்? அவரை விசாரிக்க வேண்டும்”, என்றார்.

நேற்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அவர்களின் கட்சித் தொண்டர்களுக்கு பெட்ரோல் செலவுக்குப் பணம் கொடுப்பது தப்பில்லை என்று கூறியது. ஆனால், கொடுக்கப்படும் பணம் தேர்தல் செலவுகளில் காண்பிக்கப்பட வேண்டும் என்றது வலியுறுத்தியது.