விவசாயிகள் தங்களின் உழைப்பின் பலனை அனுபவிக்கும் நந்நாளான இந்தப் பொங்கல் திருநாளை, மலேசியர்களான நாம் மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.
பொங்கலின் அடிப்படை தத்துவமே உழைப்பவர்கள் முழுமையாக அதன் பயனை அனுபவிக்க வேண்டும் என்பதே. ஆனால், விவசாயத்தைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு, நாட்டின் உணவு உற்பத்திக்கு அஸ்திவாரமாக விளங்கும் இந்தப் பாட்டாளி வர்க்கம், அதன் முழுப் பயனை அனுபவிப்பதை இன்றும் நம்மால் காண முடியவில்லை.
மாறாக, அவர்களின் ஆற்றலை சுரண்டி, ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினரைப் புகழ்பாடுவதும்; இவர்களாலேயே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்டு வருவது போலாக, ஒரு மாயையை உருவாக்கி, அதிகாரத்தில் இருப்பவர்கள் நம்மை நம்ப வைக்கின்றனர்.
நீண்ட அரசியல் போராட்டங்களுக்குப் பிறகு, நம் நாட்டில் மாற்று அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருப்பது, நமக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது.
புதிய அரசாங்கத்தில் மலர்ந்திருக்கும் இந்தத் தைப் புத்தாண்டில், தங்களுக்காக மட்டுமின்றி, பிறருக்கு உணவளிக்க உழைக்கும் விவசாயிகளுக்கு, முறையான ஊதியமும் கௌரவமும் வழங்கி, உரிமையோடு அவர்கள் வாழ அரசாங்கம் திட்டங்களை வகுத்து, செயல்படுத்த வேண்டும்.
உணவு இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு விவசாயம் மறுமலர்ச்சி பெற்றிட, அரசு துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், கால் நடை மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு மீண்டும் துன் ரசாக் பச்சிலைத்திட்டதை உயிர்ப்பிக்க வேண்டும். அதோடுமட்டுமின்றி, அரசு தரிசு நிலங்களை, உணவளிக்கும் விளைநிலங்களாக உருவாக்கி வரும் விவசாயிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, ஊக்குவிக்க வேண்டும்.
இப்பொங்கல் திருநாளன்று, பல இனங்கள் வாழும் நம் நாட்டில், சுபீட்சமும் மகிழ்ச்சியும் சகோதரத்துவமும் மேலோங்கி, வேற்றுமைகள் கலைந்து, மலேசியர்கள் என்ற கோட்பாட்டுடன், புதியப் பாதையை நோக்கி நாம் பயணிப்போம்.
அனைவருக்கும் பொங்கல், தைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள், பொங்கலோ… பொங்கல்!
- மலேசிய சோசலிசக் கட்சி