பிஎன்னில் இருந்த அனுபவம் வருத்தத்துக்குரியது என நேற்று பதிவு இரத்தான மைபிபிபி கட்சித் தலைவர் எம்.கேவியெஸ் குறைப்பட்டுக் கொண்டார்.
14வது பொதுத் தேர்தலில் செகாம்புட்டில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கொடுத்து பிஎன் மைபிபிபிக்குத் துரோகம் இழைத்தது என்று கேவியெஸ் கூறியதாக சினார் ஹரப்பான் செய்தி தெரிவித்தது.
“எந்த எதிர்பார்ப்புமின்றி பிஎன்னுக்கு உதவத் தயாராக இருந்தேன். நீண்ட காலம் பிஎன்னுக்கு விசுவாசமாக இருந்தேன். ஆனால், கடைசியில் பிஎன் காலை வாறிவிட்டது.
“எல்லாம் ஒருதலை பட்ச விசுவாசம்தான். நாங்கள் வெறும் அலங்கார பொம்மையாகத்தான் இருந்தோம். பிஎன்னின் மூன்று பெரிய கட்சிகளும் எங்களைப் பயன்படுத்திக் கொண்டதைக் காலம் கடந்துதான் புரிந்து கொண்டோம்”, என்று கேவியெஸ் கூறினாராம்.
செகாம்புட்டில் தோற்றுப் போனதும், கேவியெஸ் மைபிபிபி-இன் ஓர் அணிக்குத் தலைமையேற்று பிஎன்னிலிருந்து வெளியேறினார். அண்மையில் அவர் கேமரன் மலை இடைத் தேர்தலில் தன் கட்சியின் முழு ஆதரவும் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் எம்.மனோகரனுக்கே என்றும் அறிவித்தார்.
“பிஎன்னிலிருந்து வெளியேறியதற்காக வருத்தப்படவில்லை . 14வது பொதுத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் களமிறங்கி வேலை செய்தோம்(அவற்றை எங்களுக்குக் கொடுக்குமாறு கேட்டோம்). ஆனால், அவை மற்ற கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது.
“கூட்டம் எதுவும் நடக்கவில்லை. எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஐந்து தொகுதிகளை எதிர்பார்த்த எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை”, என்றவர் சொன்னார்