பாகாங் எம்பி டிஓஎல் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்- மனோகரன்

கேமரன் மலை இடைத் தேர்தலில் டிஏபி வேட்பாளராகக் களமிறங்கும் எம். மனோகரன் பகாங் மந்திரி புசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், தற்காலிகக் குடியிறுப்பு உரிம(டிஓஎல்)த்துக்காக செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“நேற்று  மந்திரி புசார், மாநில விவகாரங்களில் பக்கத்தான் ஹரப்பான் தலையிடக் கூடாது என்றார்.

“அப்படியானால், மாநில அரசு அந்த விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டும். அப்போதுதான் மக்கள் அவர்களின் விவகாரங்களை பக்கத்தான் ஹரப்பானுக்குக் கொண்டு வராதிருப்பார்கள்.

நேற்று, பிஎன் இடைத் தேர்தல் பரப்புரை இயக்குனருமான வான் ரோஸ்டி, நில விவகாரங்கள் மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டவை என்பதால் ஹரப்பான் மத்திய அரசுக்கு அதில் தலையிட உரிமை இல்லை என்றார்.

டிஓஎல் விண்ணப்பப் பாரங்கள் மெதுவாகவே பரிசீலிக்கப்படுவதாக பலர் தங்களிடம் கவலைப்பட்டிருக்கிறார்கள் என மனோகரன் கூறினார்.

ஆயிரம் பேருக்குமேல் டிஓஎல் நிலத்துக்கு மனுச் செய்திருந்தாலும் நில அலுவலகம் மாதத்துக்கு 10 பேரின் மனுக்களைத்தான் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறது என்றவர் சொன்னார்.

“நாங்கள் தலையிடக் கூடாது என்றால் மக்களின் பிரச்னைகளை நீங்கள் தீர்த்து வையுங்கள்.

“அவர்களை ஹரப்பான் பிரதிநிதிகளிடம் வர விடாதீர்கள்”, என்றார்.

இது கட்சி விவகாரமல்ல என்று கூறிய மனோகரன், அரசுத் துறைகள் அவற்றின் கடமையை முறையாக செய்து மக்களுக்குச் சிறந்த சேவையாறிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.