மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), செமிஞ்சே சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர், எஸ் அருட்செல்வன், தான் அத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக இன்று தெரிவித்தார்.
“போட்டியிடும் வாய்ப்பு உள்ளது, செமிஞ்சே பி.எஸ்.எம். கிளையும் மத்தியமும் இதுபற்றி முடிவு செய்யும். அங்கு போட்டியிட வேறு வேட்பாளர்களும் இருக்கின்றனர்.
“பாரம்பரியமாக பி.எஸ்.எம். போட்டியிடும் தொகுதி அது,” என அருட்செல்வன் சொன்னார்.
கடந்த வெள்ளிக்கிழமை, பெர்சத்துவைச் சேர்ந்த, செமிஞ்சே சட்டமன்ற உறுப்பினர், பக்தியார் முகமட் நோர், 57, காஜாங் மருத்துவமனையில், நெஞ்சுவலி காரணமாக உயிர் நீத்ததைத் தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில், பாஸ், பிஎன் மற்றும் பி.எஸ்.எம்.-ஐ 23,428 வாக்குகள் வித்தியாசத்தில் பக்தியார் தோற்கடித்தார்.
மூன்று முறை அத்தொகுதியில் போட்டியிட்டுள்ள அருட்செல்வன், செமிஞ்சே இடைத்தேர்தல் பற்றி கலந்துபேச, பி.எஸ்.எம். அடுத்த வாரம் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் சொன்னார்.
இடைத்தேர்தலின் போது, உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் நாட்டை நிர்வகிக்கும் பக்காத்தான் ஹராப்பானின் செயல்திறன் போன்றவற்றில், பி.எஸ்.எம். கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
“மக்கள் மனநிலையை அறிந்துகொள்ள, கேமரன் மலை இடைத்தேர்தலும் உதவும். தற்போதைய சூழல், பொதுத் தேர்தலைப் போல் உள்ளதா இல்லை மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை பார்ப்போம்,” என்றார் அவர்.
இதற்கிடையே, சிலாங்கூர் பிஎன் செயலாளர், ஜோஹான், இடைத்தேர்தல் குறித்து பேச, இவ்வாரம் வியாழனன்று கட்சியின் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.