பேராக் சட்டமன்ற உறுப்பினர், எ சிவநேசன், விவசாயி ஒருவர், தி ஸ்டார் நாளிதழ், மசீச தேசியத் தலைவர், வீ கா சியோங் மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
கம்போங் கோலா பீகாமில், 76.9 ஏக்கர் நிலத்தில் இருந்த பழ மரங்களை, மணல் தோண்டும் நிறுவனம் ஒன்று அழித்த சம்பவம் தொடர்பில், தி ஸ்டார் வெளியிட்ட 2 செய்திகளின் அடிப்படையில் இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அச்செய்தியில் வீ தரப்பு கருத்தும் இணைக்கப்பட்டிருந்தது. 30 வயதான விவசாயி போ வாய் செங், முதல் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம், மூன்றாம், நான்காம் பிரதிவாதிகளாக முறையே, தி ஸ்டார், அதன் துணை நிர்வாக ஆசிரியர் ஃபூங் பெக் யீ மற்றும் வீ கா சியோங் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி, தி ஸ்டார் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட, பழத் தோட்டம் அழிக்கப்பட்டதால் விவசாயிகள் கோபம் (Farmers angered as farms are bulldozed ) மற்றும் வீ : அழிக்கப்பட்ட பழத் தோட்டத்திற்கு விவசாயிகளுக்குப் பதில் தேவை (Wee: Farmers who lost their farmland deserve answer) எனும் 2 கட்டுரைகளும் தனக்கு பிரச்சனையாக உள்ளன என்று சிவநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அக்கம்பத்திலிருந்து மணலை வெளியேற்ற, பாசீர் பேராக் சென். பெர். நிறுவனத்திற்கு, முந்தைய பிஎன் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அந்த மணல் சுரங்கத்தில், போ சட்டவிரோதமாக பழத் தோட்டத்தை வைத்துள்ளதாகவும் சிவநேசன் தெரிவித்தார்.
அவ்விடத்தைக் காலிசெய்ய சொன்னால், அவர்கள் வெளியேற மறுப்பதாகவும் பேராக் டிஏபி துணைத் தலைவருமான சிவநேசன் சொன்னார்.
அந்த இரண்டு கட்டுரைகளிலும், தான் வாக்குறுதியை நிறைவேற்ற தகுதியற்ற மக்கள் பிரதிநிதி போன்றும், அதனால் தற்போது வகிக்கும் பதவிக்குத் தான் தகுதி இல்லாதது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, டிஏபி பொறுப்பற்றது என பொது மக்களுக்கு அக்கட்டுரைகள் காட்டுகின்றன என்றும் சிவநேசன் கூறினார்.
2018, ஆகஸ்ட் மாதம், அவ்வறிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்று, போ மற்றும் ஃபூங்கிற்கு சிவநேசன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
சிவநேசன் தனது வழக்கறிஞரின் மூலம், ஃபூங் மன்னிப்பு கேட்கவும், அவருக்கு இழப்பீடு கொடுக்கவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், பிரச்சனைக்குரிய அக்கட்டுரைகளை அவர்கள் திரும்பப்பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கும் சிவநேசன் விண்ணப்பம் செய்துள்ளார்.