2016-ஆம் ஆண்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையால் வாங்கப்பட்ட RM13.5 மில்லியன் மதிப்புள்ள 6,000 தீ தடுப்பு ஆடைகளின் தரத்தை நிர்ணயிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்தி வருகிறது.
அவ்வாடைகள், யுகே உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்டது அல்ல என எம்ஏசிசி-க்குத் தகவல் கிடைத்துள்ளது.
“அவை போலி ஆடைகள் என தகவல் வந்துள்ளது. எனவே, யுகே தடயவியல் உதவியை எம்ஏசிசி நாடியுள்ளது,” என மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.
2017-ல் அச்சட்டைகளை எம்ஏசிசி கைப்பற்றியதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அவ்வாடைகள் பாதுகாப்பற்றவை என்றும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தரநிலைகளுக்கு அவை இணங்கவில்லை என்றும் வேதியியல் இலாகா தெரிவித்ததை அடுத்து, அவ்வாடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
2016-ஆம் ஆண்டு, வீட்டுவசதி மற்றும் உள்துறை அமைச்சின் தெண்டர் முடிவுகளின் பட்டியலை மலேசியாகினி பார்த்தபோது, அதில் ஒரே ஒரு நிறுவனத்திற்குதான் தீயணைப்பு வீரர்களுக்கான ஆடைகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2016, ஜூன் 10-ஆம் தேதி, செராஸ், கோலாலம்பூர் முகவரியில் பதிவுசெய்யப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு இத்திட்டத்தை வழங்க அமைச்சரவை முடிவு செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்தெண்டருக்கான தொகை RM13,590,000, அல்லது ஓர் ஆடைக்கு RM2,265 வீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.