‘ரம்லி வெற்றி பெற்று ஹரப்பானுக்குத் தாவக்கூடும்’

ஜனவரி 26 இடைத் தேர்தலில் பிஎன்னுக்கு வெற்றி கிடைத்தால்கூட கேமரன் மலை தொகுதி பக்கத்தான் ஹரப்பான் கைக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது- பிஎன் வேட்பாளர் நம்லி முகம்மட் நோர் ஆளும் கட்சியில் சேரும் பட்சத்தில்.

ரம்லிக்காக பரப்புரைகளில் ஈடுபட்டு வரும் பிஎன் உறுப்புக் கட்சி ஒன்றில் உயர் இடத்தில் இருக்கும் ஒரு வட்டாரம் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்பலாம் என்றார்.

“பலர் அது சாத்தியமில்லை, நடக்காது என்று கூறலாம். ஆனால், அரசியலில் எதுவும் நடக்கலாம்

“இப்போதே பக்கத்தான் ஹரப்பான் கட்சிகளில் ஒன்று ரம்லி வெற்றி பெற்றால் அவரைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள நினைக்கிறது”, என அவ்வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

அப்படி நடந்தால், ஓராங் அஸ்லிகளின் மேம்பாட்டுக்காக பாடுபட விரும்பும் ஒராங் அஸ்லி இனத்தவரான ரம்லிக்கு அது மிகவும் வ்சதியாக போய்விடும்.

“அவர் துணை அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டு நாடு முழுக்க உள்ள ஓராங் அஸ்லிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கொடுக்கப்பட்டால்கூட ஆச்சரியப்பட மாட்டேன்”, என்றந்த வட்டாரம் கூறிற்று.

“பிஎன் உறுப்பினர்களில் பலரும் தேர்தலில் வென்றதும் ரம்லி ஹரப்பானில் சேர்ந்து விடுவாரா என்று கேட்கிறார்கள்.

“கேமரன் மலை பிஎன் அடிநிலை உறுப்பினர்களிடையே இதுவே அன்றாட பேச்சாகிவிட்டது. ஏனென்றால் அவர் இதுவரை எந்த பிஎன் கட்சியிலும் உறுப்பினராகவில்லை.

ஹரப்பானுக்குத் தாவுவது நம்பிக்கைத் துரோகம் ஆகாதா என்று வினவியதற்கு பிஎன் கூட்டணிதான் அவரை நேரடி வேட்பாளராகக் களமிறக்கியதே தவிர வேட்பாளராக்குமாறு ரம்லி கேட்டுக்கொண்டதில்லை என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.

“ரம்லியுடன் பலமுறை பேசியிருக்கிறேன். எப்போதும் ஓராங் அஸ்லி நலன் பற்றித்தான் பேசுவார்.

“என்னைக் கேட்டால், பிஎன் எம்பியாக இருந்து ஹரப்பானுக்கு அழுத்தம் கொடுப்பதை விட தன் சமூகத்தின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையே அவர் அதிகம் விரும்புகிறார்.

ரம்லியை தங்கள் பக்கம் இழுக்க நினைக்கும் ஹரப்பான் கட்சி அவர்களின் வேட்பாளர் எம்.மனோகரன் ஒரு வேளை இடைத் தேர்தலில் தோற்றுப் போனால் அவருக்கு வலை வீசத் தொடங்கும் என்று அது கூறியது.

ஆனால், சம்பந்தப்பட்ட அந்தக் கட்சி எது என்பதை அவ்வட்டாரம் குறிப்பிடவில்லை.