செமினி-யில் பிஎன் போட்டியிடும், பாஸ் போட்டியிடாது

எதிர்வரும் செமினி இடைத் தேர்தலில் பிஎன்னுக்கு இடம்கொடுத்து ஒதுங்கிக்கொள்ள பாஸ் முடிவு செய்துள்ளது.

“14வது பொதுத் தேர்தலில் பிஎன் பங்குக்குக் கிடைத்த வாக்குகள் அதிகம் என்பதால் பிஎன்னுக்கு வழிவிட்டு பாஸ் ஒதுங்கிக் கொள்ளும்”, என பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

பாஸ் எதிரணிப் பரப்புரைக்கு உதவும் என்று கூறிய அவர், பாஸ் உறுப்பினர்கள் பிஎன் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சியின் பக்தியார் முகம்மட் நோர் 23,428 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தொகுதி அது.

பக்தியார் கடந்த வாரம் காலமானார். அதனால்தான் இந்த இடைத் தேர்தல்.

செமினி சட்டமன்றத் தொகுதிக்காக நடைபெறும் இந்த இடைத் தேர்தலில் பிஎன், ஹரப்பானுடன் பிஎஸ்எம்-மின் எஸ். அருள்செல்வனும் போட்டியிடக் கூடும்.

அருள்செல்வனுக்கு மே 9 தேர்தலில் 1,293 வாக்குகள்தான் கிடைத்தன. 2008 தொடங்கி அவர் போட்டியிட்டு வருகிறார். ஆனால், வெற்றி கிட்டியதில்லை.