போலீசில் பதிவான வாக்குமூலங்களை வெளியிடுவீர்: அல்டான்துன்யா குடும்பத்தார் மனு தாக்கல்

கொலையுண்ட மங்கோலியப் பெண்ணான அல்டான்துன்யா ஷரீபுவின் குடும்பத்தார், அவரது கொலை தொடர்பில் போலீஸ் பதிவு செய்த வாக்குமூலங்கள் அனைத்தும் வெலியிடப்பட வேண்டும் எனச் சட்டத்துறைத் தலைவர் டாம்மி தாமசைக் கட்டாயப்படுத்தும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

போலீசார் பதிவு செய்த வாக்குமூலங்களில் அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப் அப்துல் ரசாக்கின் மெய்க்காப்பாளர் மூசா சாப்ரியின் வாக்குமூலமும் அடங்கியுள்ளது.

“எங்களுக்கு எல்லா வாக்குமூலங்களும் தேவை. வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்படாத சாட்சிகளின் வாக்குமூலங்களும் எங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்”, என வழக்குரைஞர் சங்கீத் கவுர் டியோ தெரிவித்ததாக பிரி மலேசியா டூடே கூறுகிறது.

அல்டான்துயா குடும்பத்தினர் அவரது இறப்பின்மீது தொடுத்துள்ள ரிம100 மில்லியன் வழக்கில் யாரையெல்லாம் சாட்சிகளாக அழைப்பது என்பதை முடிவு செய்ய அந்த வாக்குமூல்ங்கள் உதவும்.

அல்டான்துயாவின் தந்தை செடேவ் ஷரீபு-வும் மேலும் மூவரும் அந்த சிவில் வழக்கை 2007-இல் தொடுத்தனர்.

அவர்கள் அவ்வழக்கில் முன்னாள் போலீஸ் தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹத்ரி, கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர், அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா ஆகியோரையும் அரசாங்கத்தையும் எதிர்வாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அல்டான்துயா கொலைக்கு அசிலாவும் சிருலுமே காரணம் என்று 2015 ஜனவரியில் தீர்ப்பளித்த கூட்டரசு நீதிமன்றம் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது.

அவர்களில் சிருல், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பியோடி அங்குக் குடிநுழைவுத் துறையிடம் பிடிபட்டு இப்போது காவலில் உள்ளார்.

அவ்விருவருக்கும் உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட ரசாக் பாகிண்டா விடுவிக்கப்பட்டார்.