பினாங்கு தைப்பூசம் : தேரை இழுக்க காளைகளைப் பயன்படுத்த தடை

எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள தைப்பூசத் திருவிழாவில், தேர் இழுக்க காளைகளைப் பயன்படுத்த பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (பி.எச்.இ.பி) தடை விதித்துள்ளது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும், பினாங்கு துணை முதல்வருமான பி இராமசாமி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே, பி.எச்.இ.பி.-யின் கீழ் உள்ள கோயில்களில், தேரை இழுக்க காளைகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ள போதிலும், சில கோயில்கள் அதனைப் பின்பற்றுவதில்லை என்றார்.

இது விலங்குகளுக்கு எதிரான வன்முறை என்று அவர் கூறினார்.

“வேண்டுமானால், காளைகளை உடன் அழைத்துச் செல்லலாம், ஆனால் தேரை இழுக்க அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் இத்திருநாளில், இதுபோன்ற கொடுமைகள் நடப்பதை நிறுத்த வேண்டும்,” என்று அவர் சொன்னார்.

“தேரைப் பக்தர்கள் இழுக்கலாம், இல்லையென்றால் இழுப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்,” என்று இன்று, ஜாலான் கெபுன் பூங்கா, அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில் தைப்பூச ஏற்பாடுகளைக் கண்ணுற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

இதற்கிடையே, இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவில், பக்தர் ஒருவர் காணிக்கையாகக் கொடுத்த ஒரு தங்கத் தேர், பினாங்கு மாநில அரசின் அதிகாரப்பூர்வத் தேராக பவனிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இதில் மாநில அரசின் பணம் ஏதும் பயன்படுத்தப்படவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். முழுக்க முழுக்க இது பக்தர் ஒருவர் அளித்த காணிக்கை,” என்றார்.

இவ்வாண்டு 1.3 இலட்சம் பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் ‘ஹில்தோப்’ கோயிலுக்கு வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

-பெர்னாமா