கேமரன் இடைத்தேர்தல் | அம்னோ உச்சமன்ற உறுப்பினர், தாஜுட்டின் அப்துல் ரஹ்மான், கேமரன் மலை இடைத்தேர்தலில் பிஎன் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலைவிட, 3,000 வாக்குகள் பெரும்பான்மையில், பிஎன் வேட்பாளர் ரம்லி முகமட் நோர் வெற்றிபெறுவார் என்று நம்புவதாக அவர் சொன்னார்.
“பாஸ் முன்னர் 3,000 வாக்குகள் பெற்றது. அக்கட்சியின் தலைமை நமக்கு ஆதரவு தெரிவிப்பதால், அந்த வாக்குகள் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
“அதுமட்டுமின்றி, நமது வேட்பாளர் உள்ளூர்காரர், பூர்வக்குடியைச் சேர்ந்தவர். எனவே, பூர்வக்குடிகளின் 3,000 வாக்குகளும் நமக்குக் கிடைக்க வேண்டும். மலாய் வாக்காளர்களைப் பொறுத்தவரை, நமது வேட்பாளரும் ஓர் இஸ்லாமியர். ஆக, நமக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
“ஹராப்பானுக்கு வாக்களித்த வாக்காளர்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டனர், அவர்களின் ஏமாற்றத்தை நம்மால் கேட்க முடிகிறது. அதுமட்டுமின்றி, நமது அம்னோ தேர்தல் இயந்திரம் மிகவும் ஒழுக்குரவுள்ளது,” என இன்று கோலாலம்பூரில், ஒரு நிகழ்ச்சியின் போது அவர் சொன்னார்.
பாரிசான் கூட்டணியின் உறுப்புக்கட்சியான ம.இ.கா.-வின் பாரம்பரிய தொகுதியான கேமரன் மலையில், அக்கூட்டணியில் எந்தக் கட்சியின் உறுப்பினரும் அல்லாத ரம்லியை பிஎன் களமிறக்கியுள்ளது.