இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை போலீஸ் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது, சிஐடி தலைவர் கூறுகிறார்

 

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல தோல்விகளைக் கண்டிருந்த போதிலும் போலீஸ் இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை இன்னும் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறது.

ஈப்போ உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவின்படி கே. பத்மநாதன் என்ற முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்ய போலீஸ் கடந்த மே 30, 2014 -லிருந்து தேடிக்கொண்டிருக்கிறது என்று போலீஸ் கிரிமினல் குற்ற விசாரணை இலாகா இயக்குனர் வான் அஹமட் நாஜ்முடின் முகமட் கூறினார்.

பொதுமக்களின் மற்றும் ரித்துவானின் ஒத்துழைப்பைக் கோரி போலீஸ் பல வேண்டுகோள்களை வெளியிட்டிருந்த போதிலும், இது வரையில் எந்தப் பலனும் இல்லை என்று வான் அஹமட் கூறினார்.

இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டுவர ரித்துவான் இருக்கும் இடம் பற்றி எந்த ஒரு தகவலும் தெரிந்த பொதுமக்கள் முன்வந்து போலிஸுக்கு உதவும்படி மீண்டும் கேட்டுகொள்வதாக அவர் மேலும் கூறினார்.

இந்திரா காந்தியின் மகள் பிரசனா டிக்சா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்திற்கு மாறிய இந்திராவின் கணவர் முகமட் ரித்துவானால் கடத்தப்பட்டார்.