கேமரன் இடைத்தேர்தல் | எதிர்வரும் புதன்கிழமை இரவு, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் விவாதம், தொலைக்காட்சியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது. நம் நாட்டில் இதுபோன்று நடப்பது இதுவே முதல்முறையாகும்.
பெர்சே ஏற்பாட்டில், ‘கேமரன் மலைக்குத் தேவையான மாற்றம் என்ன?’ என்ற தலைப்பிலான இவ்விவாத மேடை, அஸ்ட்ரோ அவானி மற்றும் டிவி1-ல், இரவு மணி 9-க்கு, நேரடியாக ஒளிபரப்பப்படும்.
கேமரன் மக்கள், இந்நிகழ்ச்சியை, தானா ராத்தா, ஹெரிடேச் தங்கும் விடுதியில் நேரடியாக காணலாம்.
பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எம் மனோகரன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களான சலேஹுட்டின் அப்துல் தாலிப் மற்றும் வோங் செங் யீ மூவரும் இவ்விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
பாரிசான் வேட்பாளர், ரம்லி முகமட் நோர், விவாதத்தில் கலந்துகொள்ள தனது உறுதிப்பாட்டை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
இதற்கிடையே, இந்த விவாதம், மலேசிய அரசியலில், புதிய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது என பெர்சே செய்தித் தொடர்பாளர் தோமஸ் ஃபான் கூறினார்.
“வாக்காளர்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கவிருக்கும் பிரதிநிதியின் பேச்சுதிறன் மற்றும் மக்கள் பிரதிநிதியாக அவர்களுக்குத் தேவையான தகுதிகளைச் சுயமாக கண்டறிந்து, மதிப்பிட இது வழிவகுக்கும்.
“அதுமட்டுமின்றி, இதன்வழி, எதிர்காலத்தில் தகுதியானவர்கள் வேட்பாளர்களாக இருப்பதையும் இது ஊக்குவிக்கும்,” என தோமஸ் சொன்னார்.
இவ்விவாத மேடையில் பங்கெடுக்க 4 வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுத்ததாக அவர் தெரிவித்தார்.
“துரதிஸ்டவசமாக ரம்லி எங்களின் அழைப்பை ஏற்கவில்லை, காரணம் தெரியவில்லை. அவரின் இந்த முடிவு, அவர்மீது கேமரன் வாக்காளர்களுக்கு எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
“ஆனால், அவருக்கான அழைப்பு இன்னும் திறந்தே இருக்கிறது. இறுதி நேரத்தில் அவர் மனம் மாறினால், தாராளமாக கலந்துகொள்ளலாம்,” என்றும் தோமஸ் கூறினார்.