நஜிப் : பாரிசான் ஆட்சிகாலம், ஃபெல்டா-வின் பொற்காலம்

கேமரன் இடைத்தேர்தல் | முன்னாள் பிரதமர் நஜிப் ராசாக், தனது ஆட்சிகாலம் ஃபெல்டாவின் ‘பொற்காலம்’ என்று கூறினார்.

இன்று, கேமரன் மலை, ஃபெல்டா சுங்கை கோயானில், இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நஜிப், தான் பிரதமராக இருந்த மகத்தான நாட்களை நினைவுபடுத்தினார்.

“பிஎன் ஆட்சியில் இருந்தபோது உங்களுக்கெல்லாம் மாதந்தோறும் RM2000-RM3000 எப்படி கிடைத்தது?

“பிஎன் ஆட்சியில் இருந்தபோது, நீங்கள் எப்படி வட்டியில்லா கடன் மூலம் உங்கள் வீடுகளைப் பெரிதாக புதுபித்துக்கொண்டீர்கள்?

“பிஎன் ஆட்சியில் இருந்தபோது உங்களுக்கு எப்படி கூடுதலான போனஸ் கிடைத்தது?

“பெருநாள் காலத்தில் பணம் கிடைத்தது, பிரிம் கிடைத்தது, பள்ளி உதவிப் பணம் கிடைத்தது, எப்படி?” என அவர் பிஎன் ஆடை அணிந்திருந்த 300 வருகையாளர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், நஜிப் தன்னை ஃபெல்டா குடியேற்றக்காரர்களின் பாதுகாவலன் என்று கூறினார், ஃபெல்டா குடியேறிகளின் நலன்களை எப்பொழுதும் அவர் நினைத்து பார்ப்பதாகக் கூறினார்.

“நான் பதவியில் இருந்தபோது, சீன அதிபர் மற்றும் பிரதமரிடம் பேசினேன், அவர்களும், மலேசியாவிலிருந்து அதிகமாக செம்பனை எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டனர்.

“அதற்கு என்ன காரணம், அவர்களுடன் பேசியபோது, நான் உங்கள் முகங்களை நினைத்துகொண்டேன்.

தற்போது, ஃபெல்டா குடியேறிகளின் வருமானம் குறைந்துவிட்டதாக சிலர் தன்னிடம் வருத்தப்பட்டதாகவும் நஜிப் கூறினார்.

மாதத்திற்கு RM74 மட்டுமே கிடைப்பதாக, தன்னிடம் குறைப்பட்டுக் கொண்டதாக அவர் சொன்னார்.

ஃபெல்டா குடியேறிகளுக்கு உதவுவதில் தோல்வி கண்டுவிட்டதாக, ஹராப்பான் அரசாங்கத்தை அவர் குற்றஞ்சாட்டினார்.