இஸ்ரேலியர்கள் மலேசியாவுக்கு வரக் கூடாது என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தினார். ஏனென்றால் இரு நாடுகளுக்குமிடையில் தூதரக உறவுகள் இல்லை.
சில நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக, தீயச் செயல்களில் ஈடுபடுவோர் நாட்டுக்குள் வருவதைத் தடுக்கும் உரிமை மலேசியாவுக்கு உண்டு என்றாரவர்.
“இன்று பல நாடுகள் அயலார் வருவதை விரும்புவதில்லை. குடியேறிகளுக்கு இடமளிக்கும்போது அவர்கள் அரசாங்கத்தையே கவிழ்த்து விடுகிறார்கள்.
“எனவே, சிலருக்கு எதிராக தன் எல்லைகளை மூடி வைக்கும் உரிமை ஒவ்வொரு நாட்டுக்கும் உண்டு. அதற்காகத்தான் எல்லைகள் இருக்கின்றன. மலேசியாவுக்கு இஸ்ரேலுடன் தூதரக உறவுகள் இல்லை. அவர்கள் எத்தனையோ தீயச் செயல்களைச் செய்து, யாரும் கண்டிப்பதில்லை என்பதால் தப்பித்துக்கொள்கிறார்கள்”, என்றாரவர்.
இங்கிலாந்து சென்றுள்ள மகாதிர் அங்கு ஆக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார். அவரது உரை இன்று அதிகாலை நேரலையாக ஒளிபரப்பட்டது.
மகாதிரிடம் ஆக்ஸ்போர்ட் யூனியன் தலைவர் டேனியல் வில்கின்சன் சரவாக்கில் ஜுலை மாதம் நடைபெறும் உலக மாற்றுத்திறனாளிகள் நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ள இஸ்ரேலிய விளையாட்டாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது ஏன் என்று கேட்டதற்கு பிரதமர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.