குவான் எங்: யுஐஏஎம், யுஐஎம், இரண்டையும் போட்டுக் குழப்புகிறார் நஜிப்

நிதி அமைச்சர் லிம் குவான் எங், தம்மைக் குறைகூற வேண்டும் என்பதற்காகவே முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், யுனிவர்சிடி இஸ்லாம் மலேசியா(யுஐஎம்) வையும் யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா(யுஐஏம்)வையும் ஒன்றாக போட்டுக் குழப்புகிறார் என்றார்.

நஜிப், நியு இரா கல்லூரி, சதர்ன் யுனிவர்சிடி கல்லூரி, ஹான் சியாங் கல்லூரி ஆகியவற்றுக்கு ரிம6 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டதைத் தற்காத்துப் பேசிய லிம்மைக் குறைகூறியிருந்தார்.

அம்மூன்றும் தனியார் கல்லூரிகள் என்றும் யுஐஏம் அரசாங்கப் பல்கலைக்கழகம் என்றும் குறிப்பிட்ட நஜிப்,
அக்கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை யுஐஏம்-முக்கு ஒதுக்கப்பட்ட ரிம15 மில்லியனுடன் லிம் ஒப்பிட்டுப் பேசியது முட்டாள்தனம் என்றும் சாடினார்.

ஆனால், லிம் தாம் யுஐஏஎம் பற்றிச் சொல்லவே இல்லை என்றார். ரிம15மில்லியன் கொடுக்கப்பட்டது யுஐஎம்-முக்கு அதுவும் ஒரு தனியார் கல்விக் கழகம்தான் என்றும் அவர் கூறினார்.

“மீண்டும் தவறு செய்து விட்டார் நஜிப். யுஐஎம் சைபர் ஜெயாவில் செயல்படும் ஆதாய- நோக்கமற்ற ஒரு தனியார் கல்லூரி.

“20 ஆண்டுகளுக்குமேல் புத்ரா ஜெயாவில் பணியாற்றியவருக்கு யுஐஎம் வேறு யுஐஏஎம் வேறு என்பது தெரியாதிருப்பது வருத்தத்துக்குரியது”, என்று லிம் ஓர் அறிக்கையில் கூறினார்.

தவற்றுக்கு நஜிப் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், அவர் கேட்பார் என்று லிம் நம்பவில்லை. ஏனென்றால் நஜிப்பைப் பொறுத்தவரை தான் “தவறே செய்ய முடியாதவர்” என்ற நினைப்புத்தான் அவருக்கு.

அவர் 1எம்டிபி விவகாரத்தில் தம்முடைய தவறு எதுவுமில்லை என்று பிடிவாதமாக கூறிவருவதை லிம் சுட்டிகாட்டினார்.

“கோல்ட்மேன் சேக்ஸ் கூட தவறு செய்ததற்கு மன்னிப்பு கேட்டது ஆனால், நஜிப் இன்னும் பிடிவாதமாக உள்ளார். 1எம்டிபி விவகாரத்தில் தாம் தவறு செய்யவில்லை”, என்று நஜிப் கூறி வருகிறார் என்று  லிம் சொன்னார்.