‘பூர்வக்குடிகளில் சிலர் நஜிப் பிரதமர், பிஎன் ஆட்சியில் மலேசியா இருப்பதாக இன்னும் நினைத்து கொண்டிருக்கின்றனர்’

கேமரன் இடைத்தேர்தல் | கேமரன் மலை பூர்வக்குடிகளில் சிலர் இன்னும், நாடு பிஎன் ஆட்சியில் இருப்பதாகவும் நஜிப் பிரதமர் என்றும் நினைத்து கொண்டிருக்கின்றனர் என்று துணை பாதுகாப்பு அமைச்சர் லியூ சின் தோங் குற்றஞ்சாட்டினார்.

“இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது சுலபமானது அல்ல, அதற்கு காரணம்….. ஒரு பூர்வக்குடியினர் குடியிருப்புக்கு நான் சென்றபோது, அங்கு இணைய வசதி இல்லை, சிலரிடம் தொலைபேசி இல்லை, அவர்கள் இன்னமும் நஜிப்தான் பிரதமர் என்றும் பாரிசான் அரசாங்கம் என்றும் பக்காத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சி என்றும் நினைத்து கொண்டுள்ளனர்.

“உண்மை நிலை இதுதான், ஆனால் பிரச்சாரங்களின் வழி வெற்றி பெற நாம் முயற்சிப்போம்,” என்று, கம்போங் ராஜாவில், நிதி சேகரிப்பு இரவு விருந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் சொன்னார்.

அந்நிகழ்ச்சியில், டிஏபி தலைமைச் செய்லாளர் லிம் குவான் எங், உதவித் தலைவர் எம் குலசேகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பூர்வக்குடியினரின் வாக்குகள் இந்த இடைத்தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 22 விழுக்காட்டினைக் கொண்டது.

ஹராப்பான் இவர்களின் வாக்குகளைப் பெறுவது கடினமான ஒன்று, அதுவும் பிஎன் வேட்பாளர் ரம்லி முகமட் நோர், அந்த 22 விழுக்காட்டினரில் பெரும்பான்மையினரான செமாய் பூர்வக்குடியைச் சேர்ந்தவர்.

நிகழ்ச்சியில் பேசிய லிம், கேமரன் மலை மேம்பாடு அடைய வேண்டுமானால், அதற்கு ஹராப்பானின் வெற்றி முக்கியமான ஒன்று எனக் கூறினார்.

“காரணம், மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசாங்கத்திடம் பணம் இல்லை…. மத்திய அரசாங்கம் கேமரன் மலையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு வைத்துள்ளது,” என்று நிதி அமைச்சருமான அவர் சொன்னார்.

சுமார் 600 பேர் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில், RM10,180 நிதி திரட்டப்பட்டது.