கேமரன் இடைத்தேர்தல் | ஃபெல்டா சுங்கை கோயானில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ச்செவ் வான், பிஎன், குறிப்பாக அதன் முந்தையத் தலைவர் நஜிப் மீது தனது ஏமாற்றத்தைத் தெரிவித்தார்.
ஃபெல்டா குடியிருப்பில் வளர்ந்த அவர், ஃபெல்டா மக்களுக்கு ஊதியம் என்ற பெயரில் பணம் கொடுத்தது ஒருவகை இலஞ்சம் – பிஎன் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் போது – அதனை தான் ஆதரிக்கவில்லை என்றார்.
“தேர்தலுக்கு முன்னர், என் அம்மா உட்பட ஃபெல்டா குடியிருப்பாளர்களுக்கு RM5,000 வழங்கப்பட்டதாக என் அம்மா சொன்னார், அது இலஞ்சம் என்றுகூறி , நான் அதனை எடுக்கவில்லை,” என ஊடக சந்திப்பின் போது அவர் கூறினார்.
பிஎன்-னின் கோட்டையாக விளங்கும் ஜெலாய் தொகுதியில் ச்செவ் வானுடன் அஸ்மின் அலி மற்றும் எம் மனோகரனும் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அது மக்கள் பணம்
மற்ற நேரங்களில், ஃபெல்டா ‘பேங்க்ராப்’ ஆகும்வரை கொள்ளையடித்துவிட்டு, தேர்தலின் போது பணம் கொடுப்பதில் அர்த்தமில்லை என அவர் சொன்னார்.
“ஃபெல்டா திட்டத்தில் நிர்வாகக் கோளாறு ஏற்படும் அளவிற்கு எப்படி நீங்கள் (நஜிப்) அனுமதித்தீர்கள்?
“பல பிரச்சனைகளில் சம்பந்தம் உடைய இசா சமாட்டை (முன்னாள் ஃபெல்டா தலைவர்) எப்படி ஃபெல்டா திட்ட நிர்வாகத்தில் அமர்த்தினீர்கள்?
“அவர் (இசா) இங்கு இருந்தால், நான் அவரை அறைந்துவிடுவேன்,” என்றார் வான்.
அதோடுமட்டுமின்றி, “நஜிப் முகத்தில் அறைவேன்,” என்று அவர் கோபத்தோடு கூறினார்.
“எனக்கு கவலை இல்லை, அது மக்களின் வரி பணம்,” என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக, நஜிப், பாரிசான் அரசாங்க ஆட்சிகாலம், ஃபெல்டா குடியேறிகளுக்குப் பொற்காலம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் உண்மையை அறிய வேண்டும் என்பதற்காகவே, இன்று ஹராப்பானுக்குப் பிரச்சாரம் செய்ய வந்ததாக ச்செவ் வான் தெரிவித்தார்.
அவரைப் பொருட்படுத்த தேவையில்லை
ச்செவ் வானின் கூற்றைப் பற்றி கேட்டபோது, “அவரை நாம் பொருட்படுத்த தேவையில்லை,” என நஜிப் சொன்னார்.
“இது இலஞ்சம் அல்ல. நாம் அனைத்து ஃபெல்ட்டா குடியேறிகளுக்கும் உதவி செய்தோம், அவர்களில் அம்னோ ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பாஸ் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்களும் இருந்தனர்.
“எல்லோருக்கும் கிடைத்தது. ஆக, அது எப்படி இலஞ்சமாகும்?” என இன்று டாமான்சாராவில் செய்தியாளர்களிடம் நஜிப் கூறினார்.