மே 9 மலாய் முஸ்லிம்களுக்குக் கேடு விளைவித்த ஒரு நாளாம்: பாஸும் அம்னோவும் கூறுகின்றன

கேமரன் மலை இடைத் தேர்தல்:   நேற்றிரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசானும் ஒரே மேடையில் தோன்றிக் கூட்டுப் பிரச்சாரம் செய்தார்கள்.

பாஸ் கட்சியின் கோட்டையாகவும் பிஎன்னுக்குப் பேராதரவு உள்ள ஓர் இடமுமான பெல்டா சுங்கை கோயானில் உரை நிகழ்த்திய அவர்கள், பிஎன் ஆளும் அதிகாரத்தை இழந்த 14வது பொதுத் தேர்தல் மலாய் முஸ்லிம்களுக்குப் பேரடியாக அமைந்த ஒரு தேர்தல் என்றார்கள்.

அந்தத் தேர்தல் தோல்வியை முஸ்லிம்களின் செவுளில் “விழுந்த அறை” என்று வர்ணித்தார் ஹாடி.

“கடந்த பொதுத் தேர்தல் மலேசிய முஸ்லிம்களின் முகத்தில் பயங்கர அறை விழுந்தது. மலேசிய மக்களில் பெரும்பகுதியினர் முஸ்லிம்கள் என்பதையும் அவர்களே மலேசிய அரசியலின் முதுகெலும்பு என்பதையும் மறுக்க முடியாதுதான்.

“ஆனால், அவர்கள் முஸ்லிம்-அல்லாதாரின் ஆதிக்கம் நிறைந்த ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்து விட்டார்களே, அதுதான் அவர்களின் துரதிர்ஷ்டம்”, என்றவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட், பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் மலாய் இனமும் இஸ்லாமும் “சிறுமைப்படுத்தப்படுவதாக”க் கூறினார்.

“மே 9-க்குப் பிறகு நாட்டின் அரசியல் சூழலே மாறிவிட்டது…..நம் இனம் கேலி செய்யப்படுகிறது நமது சமயம் சிறுமைப்படுத்தப்படுகிறது.

“நாம் தொழும்போது ஐந்து சமயப் பிரார்த்தனைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமாம். எல்லாச் சமயங்களையும் ஒன்றுபோல் கருத வேண்டுமாம். இது வருந்தத்தக்கது. எப்படி மற்ற சமயங்களும் இஸ்லாமும் ஒன்றுதான் என்று கருதுவது?”, என்றாரவர்.

ஹரப்பான் அரசாங்கம் இஸ்லாமிய சமயப் பள்ளிகளை மூடுவதற்குத் திட்டமிடுவதாகவும் அம்னோ தலைவர் கூறினார்.