கேமரன் மலை இடைத் தேர்தல் பிஎன் வேட்பாளர் ரம்லி முகம்மட் நோர், இன்று இரண்டு போலீஸ் புகார்களைச் செய்தார். அவற்றில் ஒன்று ஒரு துணை அமைச்சருக்கு எதிரானது.
முதலாது புகாரில், முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியான ரம்லி, நேற்று மாலை மணி ஆறுக்கு தானும் தன் உதவியாளர்களும் சுங்கை கோயானை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது நீர், நில, இயற்கைவள துணை அமைச்சர் தெங்கு சுபூரி ஷா ராஜா பூஜி தங்கள் வானகத்தைத் தடுத்து நிறுத்தியதாக கூறினார்.
“சாலை நடுவில் நின்ற ஒரு மனிதர் எங்கள் வாகனத்தைத் தடுத்தார். நாங்கள் நிறுத்தியதும் மரியாதைக் குறைவான குரலில் என் உதவியாளர் ஒருவரிடம் அவரது கைபேசியைக் கொடுக்கும்படி அதட்டினார்.
“அவரைச் சமாதானப்படுத்த என் உதவியாளர் ஒருவர் காரை விட்டு இறங்கிச் சென்றார். அப்போதுதான் தடுத்தவர் நீர், நில, இயற்கைவள துணை அமைச்சர் தெங்கு சுல்புரி என்பது தெரிந்தது.
“அதன்பின்னர்தான் சினமூட்டும் செயல்கள் நடந்தன. என் உதவியாளரின் கைபேசியையைப் பறிப்பதற்காக எங்கள் காருக்குள் நுழைந்தார். காரோட்டுநரையும் காரில் இருந்தவர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டினார்”, என்று ரம்லி கூறினார்.
இரண்டாவது புகாரில் பகாங் வனத்துறைக்குச் சொந்தமான வாகனமொன்று பரப்புரை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாக ரம்லி கூறினார்.
இரண்டு புகார்களும் சுங்கை கோயான் போலீஸ் நிலையத்தில் செய்யப்பட்டன.