பத்து மலை ஆலய மண்டபம் கட்ட பச்சைக் கொடி : சிலாங்கூர் எம்பி வாக்குறுதி

பத்து மலை ஆலயம் அதன் ஆலய வளாகத்துக்குள் பல்நோக்கு மண்டபம் ஒன்றைக் கட்டுவதற்குத் தேவையான அங்கீகாரங்கள் கொடுக்கப்படும் என சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி உறுதி அளித்தார்.

இன்று பத்து மலை தைப்பூசத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றிய அமிருடின், எல்லா விதிமுறைகளும் பின்பற்றப்பட்டிருந்தால் அங்கீகாரம் வழங்குவதில் பிரச்னை எதுவும் இருக்காது என்றார்.

“ஆலய நிர்வாகக் குழுவுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்.

“தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் முறையாக இருந்தால் அங்கீகாரம் கொடுப்பது பிரச்னையே அல்ல”, என்று அந்த சுங்கை துவா சட்டமன்ற உருப்ப்பினர் கூறினார்.

“இது என்னுடைய வாக்குறுதி, இதை நான் நிறைவேற்றுவேன்”, என்றவர் வலியுறுத்தினார்.

முன்னதாக பேசிய ஸ்ரீமகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் ஆர்.நடராஜா, பத்து மலையில் புதிய மண்டபம் கட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே அங்குக் கட்டப்பட்டுள்ள பல கட்டிடங்களுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மண்டபம் கட்டுவதற்கு அனுமதி கேட்டு அதற்கான விண்ணப்பம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே செலாயாங் நகராட்சி மன்றத்திடம் கொடுத்தாயிற்று என்றும் அதற்கான நிதியும் இருக்கிறது. ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் கட்டுமான வேலைகளைத் தொடங்கவில்லை என்றும் நடராஜா கூறினார்.