மகள் இறந்து ஓராண்டு ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்கிறார் தந்தை

ஓர் ஆசிரியரின் கைபேசியைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட எம்.வசந்த பிரியா,13. இறந்து ஓராண்டு ஆகிறது.

அவரது இறப்புமீது கடந்த ஜூலை மாதம் ஒரு மாதம் முழுக்க விசாரணை நடந்தது என்றாலும் மகளின் சாவுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் உள்ளார் அவரின் தந்தை ஆர்.முனியாண்டி.

மரண விசாரணையில் சாட்சியம் அளிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது முனியாண்டிக்கு வருத்தமளிக்கும் இன்னொரு விசயமாகும்.

“சாட்சிகளின் பட்டியலில் என் பெயர் இருந்தது. சாட்சியம் அளிக்கச் சென்றபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, சாட்சியமளிக்க வர வேண்டாமென்று கூறியது”, என்றவர் சொன்னார்.

மரண விசாரணையில் என் மகள் கைபேசியை எடுத்தாரா என்று விசாரித்தார்கள். ஆனால், மகளை வீட்டுக்கு அனுப்புவதற்குமுன் அவரை ஐந்து மணி நேரம் தடுத்து வைத்ததாகக் கூறப்படும் ஆசிரியர் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை”, என்று முனியாண்டி நிபோங் தெபாலில் செய்தியாளர்களிடமும் தெரிவித்தார்.

வசந்தபிரியா தற்கொலை செய்துகொண்டபோது எழுதிய வைத்த குறிப்பில் கைபேசியைத் திருடியதாகக் கூறப்படுவதை மறுத்தார்.

செய்தியாளர் கூட்டத்துக்கு முனியாண்டியுடன் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டியும் செபராங் பிறை முனிசிபல் கவுன்சிலர் டேவிட் மார்ஷலும் வந்திருந்தனர்.

வசந்தபிரியாவின் பெற்றோர் அவர்களின் அனுமதியின்றி வசந்தபிரியாவைத் தடுத்து வைத்த ஆசிரியர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்று ஆலோசிப்பதாக சதீஷ் கூறினார்.

அந்த ஆசிரியரும் அவரின் கணவரும் வசந்தபிரியாவைத் தடுத்து வைத்துத் தொல்லை கொடுத்ததாக அந்தப் பதின்ம வயது பெண்ணின் உறவினர் செய்த போலீஸ் புகார் குறித்தும் மரண விசாரணையில் விவாதிக்கப்படவில்லை என்று சதீஷ் கூறினார்.

“அவர்கள் அவரைப் பள்ளியின் அனுமதியின்றிக் கூட்டிச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மரண விசாரணையில் விவாதிக்கப்படவில்லை. அப்போது அவர் அவர்களால் மன உளைச்சலுக்கு ஆளானாரா?”, என்றவர் வினவினார்.

இதனிடையே மார்ஷல், கல்வி அமைச்சு ஆசிரியர்மீது நடவடிக்கை எடுத்ததா என்று வினவினார்.

“அது தேவையற்ற ஒரு விசாரணை. 22 சாட்சிகள், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டார்கள் சாட்சியமளிக்க. ஆனால், அவரின் பெற்றோர் அழைக்கப்படவில்லை. வழக்குரைஞர்களால்கூட யாரையும் கேள்வி கேட்க முடியவில்லை.

“ஊடகங்கள் ஆசிரியரின் வாக்குமூலத்தின்மீது கவனம் செலுத்தினவே தவிர, ஐந்து மணி நேரம் மாணவியைத் தடுத்து வைத்தது ஏன் என்று கேட்கவில்லை”, என்றார்.

ஆசிரியரை , அச்சம்பவத்தை அடுத்து மாநில கல்வித் துறை அப்பள்ளியிலிருந்து இடமாற்றம் செய்து விட்டதாகத் தெரிகிறது.