பிஎன் வேட்பாளர் ஓராங் அஸ்லி இனத்தைச் சேர்ந்த ரம்லி முகம்மட் நோர் ஒரு முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி என்பது பழங்குடி மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் 60 ஆண்டுக்கால முயற்சிக்குக் கிடைத்த வெற்றியைக் குறிக்கவில்லை, தோல்வியைத்தான் குறிக்கிறது என்கிறார் லிம் கிட் சியாங்.
“மற்ற இனங்களுக்கு நிகராக ஓராங் அஸ்லிகளைப் பொருளாதாரத் துறையிலும் கல்வித் துறையிலும் மேல்நிலைக்குக் கொண்டுவர 60 ஆண்டுகள் பட்ட பாட்டின் பலனாக ஓராங் அஸ்லிகள் போலீசில் மட்டுமல்ல அரசாங்கத்தின் மற்ற துறைகளிலும் உயர் பதவிகளை எட்டியிருக்க வேண்டும்.
“அரச மலேசிய போலீசில் உயர் பதவியில் உள்ள எண்மரில் ஒருவராக ஒரு ஓராங் அஸ்லியும் இடம்பெற்றிருப்பது எப்போது?”, என்றவர் வினவினார்.
60 ஆண்டுகளில் ஒரு ஓராங் அஸ்லியை மாநில வர்த்தகக் குற்றப் பிரிவு இயக்குனராக்க முடிந்தது என்றால், இதே வேகத்தில் அடுத்து ஒருவரை மாநில வர்த்தகக் குற்றப் பிரிவு இயக்குனராக்க மேலும் 60 ஆண்டுகள் ஆகும்.ஆக , 120 ஆண்டுகளில் இரண்டு ரம்லிகள்தானா என்று லிம் ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.
ரம்லி பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு கூட்டரசு வர்த்தகக் குற்றப் பிரிவுத் துறை துணை இயக்குனராக இருந்தார். அதற்குமுன்பு பினாங்கு வர்த்தகக் குற்றப் பிரிவு இயக்குனராக பணியாற்றினார்.