கேமரன் மலை தேர்தல்: பக்கத்தான் ஹரப்பான் பரப்புரைகளில் ஈடுபட பகாங் வனத்துறை வாகனங்களைப் பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பதிலளிக்க மறுத்தார்.
“நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை…… (தேர்தல்) இயக்குனரும் அதிகாரிகளும் பதில் சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
“பரப்புரைகளுக்கு யார் பொறுப்போ அவர்களே பதில் சொல்லட்டும்”, என்று இன்று காலை கம்போங் ராஜாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் லிம் கூறினார்.
அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தியவர் நீர், நிலம் மற்றும் இயற்கைவள துணை அமைச்சர் தெங்கு சுல்புரி ஷா ராஜா புத்ரிதான் என்று கூறப்படுவது பற்றி வினவியதற்கு அந்த டிஏபி எம்பி என்ன சொல்கிறார் என்பதை முதலில் கேட்போம் என்றவர் கூறினார்.
“என்ன நடந்தது என்பதை முதலில் தெங்கு சுல்புரியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்”, என்றாரவர்.
முன்னதாக, பகாங் மாநிலச் செயலாளர் சலேஹுடின் ஈஷாக், பகாங் வனத்துறை வாகனங்கள் துணை அமைச்சர் அதிகாரப்பூர்வ பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள கொடுக்கப்பட்டிருந்தன என்றார்.
ஆனால், வாகனங்கள் ஒன்றில் ஹரப்பான் கொடிகள் ஒட்டப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டதும் வாகனங்களைத் திருப்பிக் கொடுக்க சாலேஹுடின் பணித்தார்.