அல்டான்துயா ஷாரிபுவின் உறவினர் ஒருவர் கொலையுண்ட மங்கோலியப் பெண் அவரின் அப்போதைய காதலர் அப்துல் ரசாக் பாகிண்டாவுடனும் ரசாக் என்ற பெயரைக்கொண்ட ஒரு “துணைப் பிரதமரு’டனும் உள்ள ஒரு புகைப்படத்தைப் பார்த்ததை இன்று மறுஉறுதிப்படுத்தினார்.
“நாங்கள் மங்கோலியாவில் சந்தித்துக் கொண்டபோது அவர் பாரிஸ் பயணத்தின்போது பிடித்த படங்களைக் காண்பித்தார். ஒரு படத்தில் மூவர்- அல்டான்துயாவும் இரு ஆடவர்களும்- இருந்தது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.”, என்று புர்மா ஓயுன்சிமெக் கூறினார்.
“அவர்கள் யாரென்று கேட்டேன். அவர்களில் ஒருவர் துணைப் பிரதமர் என்றும் மற்றவர் தொழில் பங்காளி என்றும் அவர் (அல்டான்துயா) தெரிவித்தார்.
“அவ்விருவர் பெயரும் ஒரே மாதிரியாக இருந்ததால் சகோதரர்களா என்று வினவினேன். இல்லை, இருவரும் நல்ல நண்பர்கள், தொழில் பங்காளிகள், ஒன்றாக வேலை செய்பவர்கள் என்றார்”, என ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் புர்மா கூறினார்.
புர்மா இன்று, அல்டான்துயா இறப்பு தொடர்பாக அவரின் குடும்பத்தினர் தொடுத்துள்ள ரிம100 மில்லியன் சிவில் வழக்கில் சாட்சியம் அளித்தார்.