அமைச்சர் : தெலோம் அணைகட்டு திட்டத்தை அரசாங்கம் இரத்து செய்கிறது

கேமரன் இடைத்தேர்தல் | கேமரன் மலையில் தெலோம் அணைகட்டு திட்டம் தொடரப்படாது என்று எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் இயோ பீ யீன் இன்று அறிவித்தார்.

இன்று, போஸ் லானையில், பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தின்போது பேசிய அவர், கடந்த ஆண்டு அக்டோபரில் தனது அமைச்சு இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.

“கடந்த அக்டோபர் 30-ம் தேதி, நாங்கள் ஒரு கூட்டத்தை நடத்தினோம் […] அக்கூட்டத்தில் நாங்கள் தெலோம் அணைகட்டை எங்கள் திட்டத்தில் சேர்க்கப்போவதில்லை என்று முடிவு செய்தோம். அதாவது, இந்த அணை கட்டப்படாது.

“இது இடைத்தேர்தலுக்காக அல்ல, இந்த அணை கேமரன் மலையில் இருக்கிறது என்பதுகூட எனக்குத் தெரியாது,” என சுமார் 200 பூர்வக்குடிகளின் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே அவர் சொன்னார்.

“அந்த அணை இப்போது தேவையில்லை அதனால் நாங்கள் அம்முடிவை எடுத்தோம். தேவையில்லாத ஒன்றுக்கு, பணத்தைச் செலவு செய்ய வேண்டியதில்லை,” என்றார் அவர்.

இதுவரை பாரிசானின் கோட்டையாக விளங்கிவரும் போஸ் லானாயில் இந்த அணை கட்டப்பட்டால் அவ்விடம் மிகவும் பாதிப்புக்குள்ளாகும்.

தெலோம் அணைக்கட்டு திட்டத்தின் படி, அணை கட்டப்பட்டால் அதிலிருந்து 132 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும், ஆனால் 7,600 ஹெக்டர் காடுகள் மற்றும் அதன் சுற்றுச்சூழலை இத்திட்டம் அழிக்கும் என அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இது நீண்ட காலமாக பூர்வக்குடிகளின் வருமான ஆதாரமாகவும் இவ்விடம் உள்ளது.