ஜோகூர், சாபா மாநிலங்கள் நீர் கட்டணத்தை உயர்த்தப் போபதில்லை என்று கூறியுள்ளன.
இது, நீர்க் கட்டணத்தை உயர்த்த எல்லா மாநிலங்களும் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக நீர், நில, இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறியதற்கு முரணாக உள்ளது.
ஜோகூர் அனைத்துலக வாணிகம், முதலீடு, பயனீட்டுக் குழுத் தலைவர் ஜிம்மி புவா. மாநில அரசு நீர்க் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றார்.
“நேற்று தேசிய நீர்ச் சேவை ஆணையம்(ஸ்பான்) எங்களைச் சந்தித்தபோதுகூட இதைத்தான் அவர்களிடமும் தெரிவித்தோம்”, என்று மலேசியாகினிக்குக் குறுஞ் செய்தி ஒன்றை அவர் அனுப்பினார்.
சாபா சுகாதார மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ஸ்டீபன் வோங்கைத் தொடர்புகொண்டு பேசியபோது அவர் சாபா நீர்க் கட்டணத்தை உயர்த்தாது என்றார்.
“முதலமைச்சர் ஷாபி அப்டால் அப்படித்தான் கூறினார்(ஜனவரி 10-இல்). அதன் பிறகு அது பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை”, என்றார்.
சாபா அரசு மாநிலத்தில் நீர்ச் சேவைகளைத் திருத்தி அமைப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.
“நீர்க் கட்டணத்தை உயர்த்தும் (கூட்டரசு அரசாங்கத்) திட்டம் குறித்து விவாதிக்க யாரும் எங்களை அணுகவில்லை”, என வோங் கூறினார்.
ஜனவரி 9-இல் ஜெயகுமார், நாட்டில் நீர் விநியோகத்தை திருத்தி அமைக்கும் முயற்சிக்கு ஏற்ப நாடு முழுக்க நீர்க் கட்டணம் கட்டம் கட்டமாக உயர்த்தப்படும் என்று கூறினார்.
நேற்று அவர், நீர்க் கட்டண உயர்வுக்கு எல்லா மாநிலங்களும் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருப்பதாகக் கூறினார் என சினார் ஹரியான் அறிவித்திருந்தது.
ஆனால், நீர்க் கட்டண உயர்வு விகிதம் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்பதையும் அவர் கூறியிருந்தார்.
புதிய கட்டணம் மக்களுக்குச் சுமையாக இருக்கக்கூடாது என்பதால் அது குறித்து முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும் என்றாரவர்.