இந்தியர்களின் வாக்குகள் ஹராப்பானுக்குச் சாதகமானவை, சிவராஜ் ஒப்புக்கொள்கிறார்

கேமரன் இடைத்தேர்தல் | கேமரன் மலை இடைத்தேர்தலில், இந்திய வாக்காளர்களின் பிளவு, பக்காத்தான் ஹராப்பானுக்குச் சில நன்மைகளைக் கொண்டுவரும் எனக் கேமரன் மலை முன்னாள் எம்பி சி சிவராஜ் தெரிவித்தார்.

கேமரன் மலை நாற்காலியை மஇகா அம்னோவிடம் கொடுத்தது இந்திய வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது மட்டுமின்றி, எம் மனோகரன் ஓர் இந்தியர் என்ற உணர்வும் இந்தியர்களைக் கருத்தில் கொள்ள வைக்கும் என அவர் சொன்னார்.

“என்னைப் பொறுத்தவரை, இந்திய வாக்காளர்கள் இன்னும் பிரிந்துபோக வாய்ப்புள்ளது. சில வாக்காளர்கள் பிஎன் –ஐ ஆதரிக்கின்றனர், சிலர் ஹராப்பானை ஆதரிக்கின்றனர். ஆனால், அங்கு அம்னோ போட்டியிடுவது, ஹராப்பானுக்குச் சிறு பலனைக் கொண்டுவரும்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், கேமரன் நாற்காலியை அம்னோவிடம் கொடுத்தது, மஇகாவின் ஒரு சிறந்த முடிவு என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“கேமரனின் இந்திய வாக்காளர்கள் வெறும் 14 விழுக்காடுதான் என்பதை நாம் ஒப்புகொள்ள வேண்டும். ஆக, இந்த இடைத்தேர்தலில் மஇகா வெற்றி பெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு,” என அவர் விளக்கமளித்தார்.

கேவியஸ் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது

மைபிபிபி தலைவர் எம் கேவியஸ், இந்த இடைத்தேர்தலில் பிஎன் நிலையை வலுபடுத்த முடியும் எனும் கேவியஸ் ஆதரவாளர்களின் சர்ச்சைக்குரிய வாதத்தை சிவராஜ் நிராகரித்தார்.

“இந்த இடைத்தேர்தலில், தற்போது ஹராப்பானுக்கு ஆதரவாக செயல்படும் கேவியஸ்’சால் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். கேமரனில், மைபிபிபி உறுப்பினர்களில் 500 முதல் 600 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர், அதுவும் கேவியஸ் எதிர்ப்பு முகாமால் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

14-வது பொதுத் தேர்தலின் (ஜிஇ 14) போது, கேமரன் மலையில் 2,000 வாக்காளர்களைப் பதிவு செய்துள்ளதாகவும், கேமரனில் போட்டியிட கேவியஸ் விருப்பம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், மஇகா தனது பாரம்பரிய இடத்தை விட்டுக்கொடுக்க சம்மதிக்காததால், கேவியஸ்-இன் ஆசை நிறைவேறாமல் போனது.

‘இந்தியர் வாக்குகளின் விழுக்காடு அதிகரிக்கும்’

சிவராஜ்ஜின் கருத்துக்கு எதிராக, சிறுபான்மையினர் உரிமைகள் கட்சியின் (மீரா) தலைமைச் செயலாளர் ஆர் கண்ணன், ஹராப்பானுக்கு, இந்திய வாக்காளர்களின் ஆதரவு, ஜிஇ 14-ஐ விட உயரும் என்று கணித்துள்ளனர்.

“அதற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று, அம்னோவிடம் மஇகா தனது நாற்காலியை விட்டுக்கொடுத்தது. இது மிக முக்கியமான ஒரு விஷயம், இதனால் இந்திய வாக்காளர்கள் பலர் பிஎன் மீது கோபமாக உள்ளனர்.”

“அம்னோவிற்கு நாற்காலியை விட்டுக்கொடுத்ததால், கேமரன் இந்திய வாக்காளர்களின் எதிர்காலம் நிச்சயமற்று போனது என அவர்கள் எண்ணுகின்றனர். இரண்டாவதாக, அவர்களோடு எப்போதும் இருக்கும் ஹராப்பான் வேட்பாளர் மீதான இந்திய வாக்காளர்களின் உணர்வு, மற்றும் மூன்றாவது, அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றின் இனவெறி அறிக்கைகள் தெளிவாக வாக்காளர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும்,” என கண்ணன் விளக்கம் தந்தார்.

இருப்பினும், கேமரனில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போவது இந்தியர் வாக்குகள் அல்ல எனும் சிவராஜ்ஜின் கருத்தைக் கண்ணன் ஆமோதித்தார்.

மாறாக, சீன மற்றும் பூர்வக்குடியினர் வாக்குகளே வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கும்.

“ஒருவேளை, சீனர்களில் 70 விழுக்காட்டினரும் பூர்வக்குடியினரும் எம் மனோகரனுக்குத் தைரியமாக வாக்களித்தால், கேமரன் மலையில் ஹராப்பான் ஓர் ஆச்சரியத்தை ஏற்படுத்த முடியும்,” என அவர் மேலும் சொன்னார்.

பூர்வக்குடியினர் வாக்குகள் நிரந்தரமானவை அல்ல

பூர்வக்குடியினர் வாக்குகள், பாரிசானின் ‘ஃபிக்ஸ் டிபோசிட்’ (நிலையான வைப்பு) அல்ல என்றும் கண்ணன் தெரிவித்தார்.

“பிரச்சாரத்தில், முதல் வாரத்தில் இருந்த சூழ்நிலை, இரண்டாவது வாரத்தில் இல்லை.

“முதல் வாரத்தில், இன்னமும் மத்திய அரசாங்கம் பிஎன், நஜிப்தான் பிரதமர் என்று எண்ணிகொண்டிருந்த பூர்வக்குடியினருக்கு, இரண்டாவது வாரத்தில் அது தவறான தகவல் என்று தெரிந்துபோய், சூழ்நிலை சற்று மாறியது.

“அவர்கள் இப்போது தெளிவடைந்துவிட்டனர். அதற்காக, அவர்கள் அனைவரும் ஹராப்பானுக்கு வாக்களிப்பார்கள் என்று நான் சொல்லவில்லை, ஆனால் 30 – 40 விழுக்காடு ஆதரவு கிடைத்தாலும் போதுமானது,” என்று அவர் கூறினார்.

கேமரன் மலை 2004-ஆம் ஆண்டு முதல், மஇகா தலைவர்கள் வெற்றி பெற்றுவரும் பாரம்பரிய தொகுதியாகும். 14-வது பொதுத் தேர்தலில், சிவராஜ் ஐம்முனை போட்டியில், 587 வாக்குகள் வித்தியாசத்தில், எம் மனோகரனை வீழ்த்தினார்.

கடந்த நவம்பர் 30-ம் திகதி, தேர்தல் நீதிமன்றம் 14-வது பொதுத் தேர்தலில், தேர்தல் ஊழல் காரணமாக, கேமரன் மலையில் பிஎன் வெற்றியை இரத்து செய்து தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் ஜனவரி 26-ல், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது, அதில் 32,009 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.