B40 காப்புறுதி திட்டம் குறித்து பி.எஸ்.எம். கவலை தெரிவித்துள்ளது

இன்று, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), ‘மைசலாம்’ எனும் B40 குழுவினருக்கான சுகாதாரக் காப்பீட்டு திட்ட அமலாக்கம் குறித்த ஒரு மகஜரை நிதியமைச்சிடம் கையளித்தது.

இன்று காலை 10.30 மணியளவில், பிரதமர் டாக்டர் மகாதிர் ‘மைசலாம்’ திட்டத்தை அறிவித்த ஒரு மணி நேரத்தில், கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர், டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் தலைமையில், சுமார் 20 பி.எஸ்.எம். உறுப்பினர்கள் அதே இடத்தில் ஒன்று கூடினர்.

மைசலாம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டால், அரசு பொது மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் நோயாளிகள் தனியார் நிறுவனங்களை நாடிச் செல்வர், இதனால் பொது சுகாதாரச் சேவையின் தரம் குறைய வாய்ப்புள்ளது என்று பி.எஸ்.எம். அஞ்சுவதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

“இது தனியார் மருத்துவமனை சந்தையை விரிவுபடுத்துவதோடு, தனியார் மருத்துவமனைகளுக்குப் பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் படையெடுக்கவும் வழிவகுக்கும்.

“தற்போது, அரசாங்க மருத்துவமனைகளில், 10 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்கள் 10 விழுக்காட்டினர் மட்டுமே இருக்கிறார்கள், மற்றவர்கள் ஏற்கனவே தனியார் சுகாதார அமைப்புகளில் உள்ளனர்.

“அதேசமயம், நோயாளிகளில் 70 விழுக்காட்டினர், அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர், 30 விழுக்காட்டினர் மட்டுமே தனியார் சுகாதார நிறுவனங்களுக்குச் செல்கின்றனர்,” என்றும் அவர் கூறினார்.

கடந்தாண்டு நவம்பர் 2-ம் திகதி, தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்று, RM2 பில்லியனை, ‘மைசலாம்’ திட்டத்திற்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். இது 4.1 மில்லியன் B40 குடும்பங்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புவோருக்கான சுகாதார உபகரணங்களை வாங்க, இந்த RM2 பில்லியனை அரசாங்கம் பயன்படுத்த வேண்டுமென ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

முந்தைய இரண்டு மகஜர்களுக்கு இதுவரை பதில் கிடைக்காத நிலையில், நிதியமைச்சில் தாங்கள் வழங்கும் மூன்றாவது மகஜர் இதுவென, அந்த முன்னாள் சுங்கை சிப்புட் எம்பி தெரிவித்தார்.

“இன்றைய எங்கள் மகஜரில், நிதியமைச்சரை சந்திக்கவும் நாங்கள் ஒரு நாளைக் கேட்டுள்ளோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.”

ஜெயக்குமாரின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த மலேசிய மருத்துவச் சங்கம் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிற அரசு சாரா அமைப்புகளை இதுவரை நிதி அமைச்சு சந்திக்கவில்லை.

“இது ஒரு நல்ல நடைமுறை அல்ல (நிதியமைச்சுக்கு),” என்று அவர் கூறினார்.