இந்தியர்களிடம் மகாதிர் மன்னிப்பு கேட்க வேண்டும், மஇகா வலியுறுத்து

கேமரன் இடைத்தேர்தல் | எம் மனோகரனுக்கு எதிரான பிரதமர் டாக்டர் துன் மகாதிரின் நகைச்சுவை, இனவாதமாக இருப்பதால், இந்திய சமூகத்திடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மஇகா தகவல் தொடர்பு பொறுப்பாளர், வி குணாளன், மகாதிர் மன்னிப்பு கேட்க வேண்டும், குறிப்பாக கேமரன் மலை இந்திய வாக்காளர்களிடம் என்று கூறியுள்ளார்.

“கடந்த 14-வது பொதுத் தேர்தலின் போது, மகாதிர் ‘கெலிங்’ எனும் சொல்லைப் பயன்படுத்தினார். இது இரண்டாவது முறை. இது இந்தியர்களை அவமதிப்பது போல் உள்ளது, இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.

“எனவே, அவர் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று மலேசியாகினியிடம் இன்று தெரிவித்தார்.

முன்னதாக, இன்று மாலை, ஃபெல்டா சுங்கை கோயானில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட மகாதிர் மனோகரனைக் கிண்டலடித்து பேசினார்.

“இருட்டாகத் தெரியவில்லை. அவரின் முடி வெள்ளை நிறமாகத்தான் தெரிகிறது,” என்று நகைச்சுவையாகப் பேசினார்.

மனோகரனின் முகம் கருப்பாகவும் முடி வெள்ளையாகவும் உள்ளது எனும் மகாதிரின் இந்தக் கூற்று, ஒரு நகைச்சுவை அல்ல என்று குணாளன் தெரிவித்தார்.

“கேமரன் மலை இந்திய வாக்காளர்கள், ஹராப்பானை நிராகரித்து, பாரிசானுக்கு வாக்களிக்க வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.