கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் முடிவுற்று. வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2014 தேர்தலுக்குப் பின்னர் இதுவே கடுமையான போட்டி நிலவும் இடைத் தேர்தலாக விளங்குகிறது.
தொகுதி முழுக்க உள்ள வாக்களிப்பு மையங்கள் காலை மணி 8-க்கே திறக்கப்பட்டு விட்டன. லோஜிஸ்டிக்ஸ் காரணத்தால் அவை வெவ்வேறு நேரங்களில் மூடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆகக் கடைசியாக மாலை 5.30க்கு மூடப்படும்.
காலை மணி 11 முடிய 47 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிக்க வந்ததாக இசி கூறியது.
இன்று காலை எஸ்கே மென்சுனில் செய்தியாளர்களிடம் பேசிய பிஎன் வேட்பாளர் ரம்லி முகம்மட் நோர், அவருக்கு ஊடகங்களைப் பிடிக்காது என்று கூறப்படுவதை மறுத்தார். முன்னாள் போலீஸ் அதிகாரியான தனக்கு ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்பு உண்டு என்றார்.
“உங்களை எனக்குப் பிடிக்கும். நான் பக்கத்தான் ஹரப்பான் வலையில் விழ மாட்டேன். அதிகம் பேசும்போது தேவையற்ற விசயங்கள்தான் வெளிவரும்…” என்றாரவர்.
வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறதா என்று வினவியதற்கு, இன்ஷா அல்லாஹ்( ‘இறைவன் நாடினால்’ )”, என்றார்.