கட்சி சின்னம் கொண்ட சட்டை அணிந்த மனோகரன் வெளியேற்றப்பட்டார்

பக்கத்தான் ஹரப்பான் சின்னம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்து வாக்களிப்பு மையத்துக்குள் வந்த ஹரப்பான் வேட்பாளர் எம்.மனோகரன் தேர்தல் அதிகாரிகளால் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டார். அது தேர்தல் சட்டப்படி ஒரு குற்றமாகும்.

இச்சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்ட பிஎன் வேட்பாளர் ரம்பி முகம்மட் நோர், பல தேர்தல் களங்களைக் கண்ட மனோகரன் இப்படிச் செய்யலாமா என்று வினவினார்.

“அவர் அனுபவம் வாய்ந்தவர். எத்தனை தேர்தல்களைச் சந்தித்தவர்?

“எனக்கு இதுதான் முதல் தேர்தல். அவரது செயல் குறித்து மக்களே முடிவு செய்யட்டும்”, என்றார்.

ரம்லியுடன் இருந்த அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், மனோகரனின் செயல் ஆட்சிக்கு வந்த பின்னர் ஹரப்பான் விதிமுறைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதைத்தான் காட்டுகிறது என்றார்.

கடந்த காலத்தில் பிஎன் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டி வந்த தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே அமைப்பு இது போன்ற தவறுகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.