மக்கள் முற்போக்குக் கட்சி (மைபிபிபி) அதன் பதிவுநீக்கத்துக்கு எதிராக செய்துள்ள மேல்முறையீடு உரிய கவனத்தைப் பெறத் தவறினால் சங்கப் பதிவகம்(ஆர்ஓஎஸ்)மீது வழக்கு தொடுப்பது குறித்து ஆலோசிக்கும்.
மைபிபிபி கட்சி ஜனவரி 15-இல் பதிவுநீக்கம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே ஆர்ஓஎஸ் வழியாக உள்துறை அமைச்சர் முகைதின் யாசினுக்கு மேல்முறையீடு செய்ததாக மைபிபிபி முன்னாள் தலைவர் எம்.கேவியெஸ் கூறினார்.
“ஆர்ஓஎஸ் செய்தது சரியல்ல. ஆனாலும், நான் அந்த அரசாங்க அமைப்பைக் குறை சொல்ல விரும்பவில்லை. மைபிபிக்கு அதனுடன் 25 ஆண்டுக்காலத் தொடர்புண்டு.
“விவகாரம் அமைச்சர் அளவில் தீர்க்கப்படாவிட்டால் நான் ஆர்ஓஎஸ்-ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்படலாம்.
“அமைச்சரிடம் முறைப்படி முறையிட்டிருக்கிறோம். அதில் தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்”, என்றாரவர். கேவியெஸ், கேமரன் மலையில் எஸ்எம்கே சுல்தான் அஹமட் ஷாவில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.