கேவியஸ் : மைபிபிபி மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தால், நீதிமன்றம் போவேன்

தனது தலைமையிலான மைபிபிபி கட்சியின் பதிவை, மலேசிய சங்கங்கள் பதிவிலாகா (ஜெபிபிஎம்) இரத்து செய்ததைத் தொடர்ந்து, தான் உள்துறை அமைச்சர், முஹிடின் யாசினிடம் முறையீடு செய்ததை எம் கேவியஸ் ஒப்புக்கொண்டார்.

மைபிபிபி பதிவை, ஜெபிபிஎம் இரத்து செய்த மறுநாள், ஜனவரி 15-ம் தேதி, நேரடியாக அமைச்சரிடமே அம்முறையீட்டைச் செய்ததாக, இன்று, கேமரன் மலை சுல்தான் அஹ்மாட் ஷா இடைநிலைப்பள்ளியில், இடைத்தேர்தலில்  வாக்களித்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

தங்களின் மேல்முறையீடு மறுக்கப்பட்டால், நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி இல்லை என்றும் கேவியஸ் கூறினார்.

“அரசாங்க நிறுவனங்களை நான் குற்றம்சாட்டவில்லை, ஏனென்றால் ஜெபிபிஎம் கிட்டத்தட்ட 25 வருடங்களாக, எந்தவொரு பிரச்சனையும் இன்றி மைபிபிபியுடன் உறவு வைத்துள்ளது.

“செக்‌ஷன் 18, 1966 சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், அமைச்சரிடம் முறையீடு செய்தும், இப்பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை என்றால், நாங்கள் நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை,” என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, மைபிபிபி கட்சியின் அதிகாரப்பூர்வத் தலைவராக தான் இருக்கும் போது, மைபிபிபி சார்ந்த இரு தரப்பினருக்கும், ஜெபிபிஎம் கடிதம் அனுப்பியது சட்டப்படி குற்றம் என்பதையும் கேவியஸ் சுட்டிக்காட்டினார்.

“ஜெபிபிஎம் இரு தரப்பினருக்கும் (மைபிபிபியின் 2 குழுவினர்) கடிதம் அனுப்பினால், யார் மேல்முறையீடு செய்வது? யாருடைய முறையீட்டை அமைச்சர் ஏற்றுக்கொள்வார்?” என கேவியஸ் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, கடந்தாண்டு முதல் ஏற்பட்டுவரும் உட்கட்சி பூசலினால், மைபிபிபி கட்சி பதிவை ஜெபிபிஎம் இரத்து செய்தது.

இத்தகவலை, ஜெபிபிஎம் தலைமை இயக்குநர் மஸாத்தி அபாங் இப்ராஹிம், கடிதம் வாயிலாக, கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வரும் எம் கேவியஸ் மற்றும் மெக்லின் டென்னிஸ் டி’குருஸ் இருவருக்கும் தெரிவித்தார்.

கடந்தாண்டு, பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மைபிபிபி 64- தேசிய மாநாட்டில், கேவியஸ்-ஐ தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யும் (டி’குருஸ்-இன் பரிந்துரை எனக் கூறப்படுகிறது) பரிந்துரைக்கு ஒட்டுமொத்தமாக அனைவரும் ஆதரவு தந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், மைபிபிபி-யின் அதிகாரப்பூர்வத் தலைவர் தான்தான் என்று கூறிக்கொண்ட கேவியஸ், கேமரன் மலை இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவும் தெரிவித்தார்.

கட்சியின் மேல்முறையீட்டில், ‘போதிய காரணங்கள் இல்லாததால்’, மைபிபிபி பதிவை இரத்து செய்வதாக மஸாத்தி ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

-ஃப்ரீ மலேசியா டுடே