கேமரன் மலை இடைத்தேர்தலில் பாரிசான் வென்றது, அக்கூட்டணியின் வேட்பாளர் ரம்லி முகமட் நோர், பூர்வக்குடியினரைச் சார்ந்த முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
3,238 வாக்குகள் வித்தியாசத்தில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எம் மனோகரனை ரம்லி வென்றார். ரம்லிக்கு 12,038 வாக்குகள் கிடைத்த வேளை, மனோகரனுக்கு 8,800 வாக்குகள் கிடைத்தன.
சுயேட்சை வேட்பாளர்கள் வோங் செங் யீ மற்றும் சலாஹுட்டின் அப்துல் தாலிப் முறையே 276 மற்றும் 314 வாக்குகள் பெற்றனர். இருவரும் வைப்புத் தொகையை இழந்தனர்.
14-வது பொதுத் தேர்தலுக்குப் (ஜிஇ14) பின் நடந்த இடைத் தேர்தல்களில், கேமரனில்தான் அதிகமாக வாக்களிப்பு நடந்துள்ளது, 68.79 விழுக்காட்டினர் இன்று வாக்களித்துள்ளனர்.
மேலும், ஜிஇ14-க்குப் பின்னர், பிஎன் வெற்றி பெற்ற முதல் இடைத் தேர்தல் இதுவாகும்.
அதுமட்டுமின்றி, அனைத்து இடைத் தேர்தல்களிலும், கட்சிகள் தங்கள் இடங்களை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு தொடர்ச்சியான போக்கையும் இது காட்டுகிறது.
மனோகரனைப் பொறுத்தவரை, கேமரன் மலையில் இது அவருக்கு மூன்றாவது தோல்வி. ஆளும் கூட்டணியைப் பிரதிநிதிக்கும் வேட்பாளராக அவர் போட்டியிடுவது இது முதல் தடவையாகும்.