எம். இந்திரா காந்தி, தன்னை விட்டுப் பிரிந்த கணவர் முகம்மட் ரித்வான் அப்துல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பைப் பெறுவதில் வெற்றி அடைந்து ஓராண்டு ஆகிறது ஆனால், அவரது வாழ்க்கைப் போராட்டம் இன்னும் ஓயவில்லை.
ஃப்ரி மலேசியா டுடே-க்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இந்திரா, கைகாசு எல்லாம் கரைந்து போனதாகவும் ரித்வான் பற்றி எந்தத் தகவலும் இதுவரை இல்லை என்றும் வருத்தப்பட்டார்.
“அவருக்கு இப்போது வேறொரு குடும்பம் இருக்கலாம். ஆனால், என் நிலை என் குடும்பத்தின் நிலை என்ன? திரிசங்கு நிலையில் தவிக்கிறோம்”, என்று கூறியவர், போலீசில் சிக்காமல் மறைந்து வாழும் முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சமோ பிள்ளைகள் உதவிக்கான பணமோ வந்ததில்லை என்றார்.
அது மட்டுமல்ல, அவருக்கு இப்போது வேலை இல்லை, மேலும், ரித்வான் அவரின் பெயரில் எடுத்த கார்-கடனைக் கட்ட முடியாமல் போனதால் அவர் திவாலாகிப் போனதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள், வழக்குகள் என்று அலைந்துகொண்டிருந்த அவருக்கு வேலை கொடுக்கவே தயங்குகிறார்கள்.
இத்தனை தொல்லைகளுக்கிடையிலும் ரித்வான் கடத்திச் சென்ற தன் மகள் பிரசன்னா திக்ஷா மீண்டும் தன்னை வந்து சேர்வார் என்ற நம்பிக்கையை மட்டும் இந்திரா இழந்து விடவில்லை.
“அவள் எப்படி இருப்பாள் என்று தெரியவில்லை. பள்ளி செல்கிறாளா என்பதுகூட தெரியாது”, என்றவர் சொன்னார்.
முன்னாள் கணவர் ரித்வானுடன் வாழ்ந்த 13-ஆண்டுகளில், கணவர் ஒரு எந்தவொரு வேலையிலும் நிலையாக இருப்பதில்லை என்பதால் எப்போதும் பணப் பிரச்னைதான் என்றாரவர்.
ஒருமுறை ரித்வான், மதம் மாறினால் தேவையான உதவிகள் கிடைக்கும், என்று கூறினாராம்.
“முதலில் கிறிஸ்துவராக மாற நினைத்தார். ஆனால், அது பெரிதாக உதவப் போவதில்லை என்று அறிந்ததும் இஸ்லாத்துக்கு மாறலாம் சலுகைகள் கிடைக்கும் பணப் பிரச்னைகளும் தீரும் என்றார்”.
முடிவில், 2009 மார்ச் மாதம் இஸ்லாத்துக்கு மதம் மாறினார். கே. பத்மநாதன் என்றிருந்த அவரது பெயரும் ரித்வான் ஆயிற்று. தான் மதமாறியவுடன் மூன்று பிள்ளைகளையும் தன்மூப்பாக மதம் மாற்ற முனைந்தார்.
அப்போது இந்திரா எதிர்த்துப் போராடவே, கடைசிப் பிள்ளையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
அந்தப் பிள்ளை தந்தையின் பராமரிப்பிலேயே இருக்கலாம் என ஷியாரியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உயர் நீதிமன்றம் பிள்ளை இந்திரா காந்தியிடம்தான் வளர வேண்டும் என்று உத்தரவிட்டது.
அத்துடன், ரித்வானைக் கைது செய்யவும் ஆணை பிறப்பித்தது. ஆனால், ரித்வானும் மகள் பிரசன்னாவும் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை.
கூட்டரசு நீதிமன்றம், பிள்ளைகளை மதம் மாற்ற பெற்றோர் இருவரின் சம்மதம் தேவை என்று தீர்ப்பளித்து மூன்று பிள்ளைகளையும் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்தது செல்லாது என்று அறிவித்தது.
இம்மாதத் தொடக்கத்தில், இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் ஃபூசி ஹருன், போலீஸ் ரித்வான் மற்றும் பிரசன்னாவை இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகவும் அவர்களின் இருப்பிடம் தெரியவில்லை என்றும் கூறினார்.