பாஸ் உதவியுடன் கேமரன் மலையில் பிஎன் வெற்றி

முதல்முறையாக, அம்னோ-பாஸ் தேர்தல் உடன்பாடு வேலை செய்துள்ளது.

கடந்த நான்கு இடைத் தேர்தல்களில் நடக்காதது கேமரன் மலை இடைத் தேர்தலில் நடந்தது. பிஎன் 54.73 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.

14வது பொதுத் தேர்தலில் பிஎன், பாஸ் இரண்டுக்கும் சேர்த்து கேமரன் மலையில் எந்த அளவு வாக்குகள் கிடைத்தனவோ(55.23விழுக்காடு) கிட்டத்தட்ட அதே அளவு வாக்குகள்தான் இப்போதும் கிடைத்துள்ளன.

பிஎன் வேட்பாளர் ரம்லி முகம்மட் நோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடனேயே அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் பாஸுடன் கூட்டு வைத்துக் கொண்டதுதான் வெற்றிக்குக் காரணம் என்றார்.

மலேசியாகினி மேற்கொண்ட தொடக்க நிலை ஆய்வுகளில் , ஓராங் அஸ்லிகள் இந்தத் தேர்தலில் மிகவும் முனைப்புடன் வாக்களித்ததாக தெரிய வந்தது.

ஓராங் அஸ்லிகள் பெரும்பான்மையாக உள்ள ஒன்பது பகுதிகளில் 79.8 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களிக்க வந்ததாகக் கணிக்கப்படுகிறது.

மற்ற பகுதிகளில் வாக்களித்த வாக்காளர்களின் சராசரி எண்ணிக்கை 68.79 விழுக்காடு.

பகாங்கில் உள்ள அத்தொகுதியில் பிஎன்னுக்கு ஒராங் அஸ்லிகளின் ஆதரவு வலுவாகவே உள்ளது.

மலாய்க்காரர்களிலும் 70.46 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

அவர்களோடு ஒப்பிடும்போது சீனர்கள், இந்தியார்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

அதிலும் இந்தியர் எண்ணிக்கை மிகவும் குறைவு. பலர் அத்தொகுதியை விட்டு வெளியேறி விட்டனர் போலும்.

வெளிப்பார்வைக்கு பிஎன் பரப்புரைகளில் கொள்கை பற்றி அதிகம் பேசப்பட்டதாக தெரியவில்லை. ஹரப்பான் 14வது பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டதைத்தான் ஓயாமல் சுட்டிக்காட்டினார்கள்.

அதேவேளை பாஸும் அம்னோ வேறொரு வேலையைச் செய்தன. வீட்டுக்குவீடு தங்கள் ஆள்களை அனுப்பி வைத்து ஹரப்பான் வேட்பாளர் எம்.மனோகரன் தங்களைச் சேர்ந்தவர் அல்லர் என்பதால் அவரை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்று கூற வைத்தனர்.

ஒவ்வோர் இரவும் பாஸும் அம்னோவும் மலாய் கம்பங்களில் சிறுசிறு கூட்டங்களை நடத்தி அவர்களிடம் டிஏபி அவர்களுக்கு ஒரு மிரட்டல் என்றுகூறி அது பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் மலேசியாகினி நடத்திய ஆய்வுகளில், பலர் கடந்த நவம்பரில் கொல்லப்பட்ட தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் இறப்புக்குக் காரணமான கலகக்காரர்களைச் சேர்ந்தவர்தான் மனோகரன் என்று கூறினர்.

அடிப்பின் மரணத்துக்குக் காரணம் என்று இதுவரை யாரும் குற்றவாளியாக்கப்படாமலிருப்பதும் நிலைமையை மோசமாக்கியுள்ளது.

ஹரப்பான் தரப்பில் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், ஏன் பிரதமர் மகாதிர் முகம்மட்டும்கூட இறங்கி வேலை செய்தார்கள். ஆனால், பிஎன்னின் இனவாதப் பிரச்சாரத்துக்கு எதிராக எதுவும் எடுபடவில்லை.

மகாதிரின் பங்களிப்பு பெரிய தாக்கத்தை உண்டாக்கியதா என்று தெரியவில்லை. ஆனால், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பங்களிப்பு பிஎன்னுக்குப் பெரும் சாதகமாக அமைந்தது. யாரும் எதிர்பாராமலேயே, நஜிப்தான் பிஎன், பிஎன்தான் நஜிப் என்று சொல்லும் நிலையை அவர் உருவாக்கி விட்டார்.

நஜிப் காலை தொடங்கிப் பொழுது சாயும்வரை பரப்புரை செய்வார். வாக்காளர்களை அணுகி உரையாடுவார், செல்பி எடுத்துக்கொள்வார்.

பிஎன் என்னவெல்லாம் செய்தது என்பதை விளக்குவார், இப்போதைய கூட்டரசு அரசாங்கம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி கேலி செய்வார்.

அத் தொகுதியில் அவருக்கிருந்த செல்வாக்கை டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்கும் உணர்ந்திருந்தார். அதனால்தான், அவர் கேமரன் மலையில் பிஎன்னுக்குக் கிடைக்கும் வெற்றி நஜிப்புக்குக் கிடைத்த வெற்றியாகதான் பொருள் கொள்ளப்படும் என்று வாக்காளர்களை எச்சரித்து வந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், நஜிப்பின் பலத்தை லிம் உணர்ந்திருக்க, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் அம்னோ தலைவர்களில் எவரும் வெற்றிக்குக் காரணம் நஜிப்தான் கூறத் தயாராக இல்லை.

ஆனால், நஜிப்புக்கு அணுக்கமான வட்டாரமொன்று, பிஎன் வெற்றி அறிவிக்கப்பட்டதும் நண்பர்களும் பிஎன் உறுப்பினர் பலரும் முன்னாள் பிரதமரை அழைத்துப் பாராட்டியதாகக் கூறியது.