உலகப் பாராலிம்பிக் நீச்சல் போட்டியை ஏற்று நடத்தும் தகுதியை மலேசியா இழந்தது

இஸ்ரேல் நீச்சல் வீரர்கள் போட்டியில் பங்கெடுப்பதைத் தடுத்ததன் காரணமாக, 2019 பாரா உலக நீச்சல் போட்டியை ஏற்று நடத்தும் தகுதியை மலேசியா இழந்தது.

இன்று, லண்டனில், சந்திப்புக் கூட்டம் நடத்தியப் பாரா சர்வதேச நிர்வாக குழுவினர் (ஐபிசி) இந்த முடிவை எடுத்தனர்.

“அனைதுலகப் போட்டிகள், தகுதி வாய்ந்த அனைத்து வீரர்களுக்கும் திறந்துவிடப்பட வேண்டும், எந்தவொடு ஒடுக்குமுறையும் இல்லாமல், அவர்கள் பாதுகாப்பாக, சுதந்திரமாக போட்டிகளில் ஈடுபட வேண்டும்,” என ஐபிசி தலைவர், எண்ட்ரூ பார்சன்ஸ் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“அரசியல் காரணமாக, ஒரு நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்களை, போட்டியை ஏற்று நடந்தும் நாடு ஒதுக்கி வைத்தால், அப்போட்டியை வேறொரு நாட்டில் நடத்துவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை.

இவ்வாண்டு ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 4-ம் தேதி, கூச்சிங்கில் நடைபெறவுள்ள இப்போட்டி, 2020 தோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டியாகும்.

60 நாடுகளைச் சேர்ந்த, சுமார் 600 நீச்சல் வீரர்கள், 160 பதக்கங்களை வெல்ல, கூச்சிங் பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ளவிருந்தனர்.

 

2017-ம் ஆண்டு, அப்போட்டியை ஏற்று நடத்த மலேசியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது, தகுதி வாய்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐபிசிக்கு உறுதியளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“ஆனால், இப்போது மலேசியாவில் அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, புதிய அரசாங்கம் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளது,” என்று பார்சன்ஸ் கூறினார்.

ஜனவரி 19-ம் தேதி, பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட், மலேசியாவுடன் இராஜதந்திர உறவு இல்லாததால், இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் மலேசியாவிற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தினார்.

மீண்டும் இதே கருத்தை, வியன்னா, ஆஸ்திரியாவிலும் மகாதீர் வலியுறுத்தினார்.

“இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடு, அந்நாட்டு வீரர்களை எங்களால் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது. ஒவ்வொரு நாட்டுக்கும், வேறொரு நாட்டு மக்களை ஏற்றுக்கொள்ளவும் தடை செய்யவும் உரிமை உண்டு.

“அதுமட்டுமின்றி, இஸ்ரேஸ் சட்டத்திற்குப் புறம்பான பல செயல்களைச் செய்துள்ளது, அதனால் அந்நாட்டு வீரர்களை எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது,” எனவும் கடந்த 22-ம் தேதி, ஆஸ்திரியாவில், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.